40 வீத சம்பள அதிகரிப்பு முடிவுக்கு வந்தது 1000 ரூபா சம்பள இழுபறி

 700 ரூபாவுக்கு இருதரப்பும் இணக்கம்
திங்களன்று ஒப்பந்தம் கைச்சாத்து

நிலுவை வழங்க அரசு 100 மில்லியன் நிதி

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட்சம்பளத்தை 40 வீதத்தால் அதிகரிக்க நேற்று (25) இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன்படி அடிப்படைச் சம்பளத்தில் நாளாந்தம் 200 ரூபாய் அதிகரிப்பை வழங்க இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளதாகவும் இந்த அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை இரண்டாண்டுகளுக்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இதுவரை காலம் 500ரூபாயாக இருந்த தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளம் புதிய ஒப்பந்தத்தின்படி 700 ரூபாயாக அதிகரிக்கின்றது. அத்துடன் தேயிலை விலைக்கேற்ப வழங்கப்பட்டு வந்த 30ரூபாய் கொடுப்பனவு 50ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 750 ரூபாய் சம்பளமாகக் கிடைக்கும். இத்துடன் கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேலாக இழுபறிபட்டு வந்த ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

அத்துடன், கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து நிலுவைத் தொகையை வழங்குவதற்கும் கம்பனி நிர்வாகங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. இதற்கு அரசாங்கம் 100 மில்லியன் ரூபாய் மானியம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழில் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ​பேச்சுவார்த்தையிலேயே இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், பொதுச் செயலாளர் அனுஷியா சிவராஜா, தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டியின் பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதன் முதலானோர் நேற்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

நீண்டநேர இழுபறிக்குப் பின்னர், அமைச்சர்கள் நவீன் திசாநாயக்க, ரவீந்திர சமரவீர, இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோர், 700 ரூபாய் அடிப்படை நாட்சம்பளமும் தேயிலை விலைக்கேற்ற கொடுப்பனவாக 50 ரூபாயுமாக 750 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்தக் கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

அதன் பின்னர், நிலுவைச் சம்பளம் தொடர்பாகப் பிரஸ்தாபிக்கப்பட்டபோது அதற்கான நிதி வளம் தம்மிடம் இல்லையென முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து தேயிலைச் சபையிலிருந்து 100 மில்லியன் ரூபாய் மானியத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும் மேலும் 50 மில்லியன் ரூபாயை வட்டியில்லாக் கடனாகப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

தொழிலாளர்கள் கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து தொழிலுக்குச் சென்ற நாட்களின் அடிப்படையில் நிலுவைச் சம்பளத்தை வழங்குவதாக முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கூட்டு ஒப்பந்தத்திலுள்ள ஏனைய விடயங்களையும் முன்னைய இணக்கப்பாடுகளையும் நடைமுறைப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டதாகத் தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இராமநாதன் தினகரனுக்குத் தெரிவித்தார். நாளொன்றுக்குப் பறிக்க ​வேண்டிய தேயிலைக் கொழுந்தின் அளவைத் தோட்டங்கள் ரீதியாகக் கலந்துரையாடி முடிவெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். அநேகமாக இந்த இணக்கப்பாடு திருப்தியளிக்கக்கூடியது என்றும் வரலாற்றில் முதற்தடவையாக தொழிலாளர்களுக்கு 40 வீத சம்பள அதிகரிப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றைக் கொண்டுவந்து, தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

அந்தப் பிரேரணை மீது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவீந்திர சமரவீர, சங்கங்களுக்கும் சம்மேளனத்திற்கும் இரண்டு நாள் கால அவகாசத்தை வழங்கியிருந்ததுடன், தவறும் பட்சத்தில் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தப்போவதாகவும் எச்சரித்திருந்தார். அந்தச் சூழ்நிலையில், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் ஆயிரம் ரூபாய் பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுள்ளது.

தவிரவும், தொழிலாளர்களின் நாட்சம்பளத்துடன் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வரவுக்கேற்ற கொடுப்பனவான 60 ரூபாய், உற்பத்தி ஊக்குவிப்புக்கான 140 ரூபாய் போன்றவைபற்றி நேற்றைய கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்படவில்லை. எனினும், அவற்றுக்குப் பாதிப்பு இருக்காது என்று தொழிற்சங்கத் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விசு கருணாநிதி

 

Sat, 01/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை