ரூ.3,000 இலஞ்சம் பெற்ற பொலிசாருக்கு எட்டு வருட கடூழிய சிறை

Rizwan Segu Mohideen

சாரதி ஒருவரிடமிருந்து ரூபா 3,000 பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு எட்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிராந்துருகோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கே, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி, சஷி மஹேந்திரன் முன்னிலையில் குறித்து வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் குறித்த தீர்ப்பை வழங்கினார்.

அத்துடன் ரூபா 20,000 அபராதத்தையும் செலுத்துமாறும் நீதவான் தனது தீர்ப்பில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பில் சாரதி ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருப்பதற்காக குறித்த கான்ஸ்டபிள் இவ்வாறு இலஞ்சம் பெற முயற்சி செய்த வேளையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 2014 மே மாதம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், இலஞ்சம் வாங்கியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

Thu, 01/03/2019 - 13:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை