ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் வேகமாக 27 சதங்கள் பெற்றார் ஹசிம் அம்லா

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் வேகமாக 27சதங்களை பெற்ற வீரர் எனும் விராத் கோஹ்லியின் சாதனையை பாகிஸ்தான் அணிக்கு எதிரான சதத்தின் மூலம் தென்னாபிரிக்க வீரர் ஹசிம் அம்லா முறியடித்தார்  

தென்னாபிரிக்காவுக்கு இருதரப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு தென்னாபிரிக்க அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடி வருன்றது. முதல் தொடரான டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணி 3-–0எனுமடிப்படையில் பாகிஸ்தான் அணியை வெள்ளையடிப்பு செய்திருந்தது.  

இந்நிலையில் சுற்றுத்தொடரின் அடுத்த போட்டியான 5போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (19) போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, தமது வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் 5விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை இழந்ததற்கு முதல் போட்டியில் பதில் கொடுத்துள்ளது. 

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50ஓவர்கள் நிறைவில் 2விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 266ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஹசிம் அம்லா ஆட்டமிழக்காது 108ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

இதன் மூலம் ஒருநாள் சர்வதேச அரங்கில் ஹசிம் அம்லா தனது 27ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்த 27ஆவது சதத்தின் மூலம் ஹசிம் அம்லா சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். 

27ஒருநாள் சதங்களை குறைந்த போட்டிகளில் (170) பெற்ற வீரர்கள் வரிசையில் தற்போது சதத்தின் மூலம் ஹசிம் அம்லா முதலிடத்தில் இருந்த விராத் கோஹ்லியை பின்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். அத்துடன் 5ஆவது வீரராக 27சதங்களை அம்லா பூர்த்தி செய்துள்ளார். இதுவரையில் 5வீரர்கள் மட்டுமே 27சதங்களை பூர்த்தி செய்துள்ளனர்.  

வேகமாக 27 சதங்களை பூர்த்தி செய்த வீரர்கள் 

 ஹசிம் அம்லா (தென்னாபிரிக்கா) – 170போட்டிகள் (167 இன்னிங்ஸ்கள்) 

 விராத் கோஹ்லி (இந்தியா) – 177போட்டிகள் (169 இன்னிங்ஸ்கள்) 

 சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 261போட்டிகள் (254 இன்னிங்ஸ்கள்) 

 

ரிக்கி பொன்டிங் (அவுஸ்திரேலியா) – 317போட்டிகள் (308 இன்னிங்ஸ்கள்) 

 சனத் ஜயசூரிய (இலங்கை) – 416 போட்டிகள் (404 இன்னிங்ஸ்கள்) 

ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 26சதங்கள், குறைந்த இன்னிங்ஸில் 6,000ஓட்டங்கள் மற்றும் குறைந்த இன்னிங்ஸில் 7,000ஓட்டங்கள் போன்ற கோஹ்லியின் 3சாதனைகளை இதற்கு முன்னர் ஹசிம் அம்லா முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது அவருக்கு கோஹ்லியின் சாதனையை முறியடிக்கும் 4ஆவது சந்தர்ப்பமாகும். 

170 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஹசிம் அம்லா மொத்தமாக 7,804 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 27 சதங்களும், 36 அரைச்சதங்களும் உள்ளடங்கும்.   

Tue, 01/22/2019 - 12:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை