269 ஹெக்டயர் நிலப்பரப்புடன் துறைமுக நகரம் உருவானது

ஷம்ஸ் பாஹிம்

துறைமுக நகரம் உருவாக்குவதற்காக மண்நிரப்பும் பணி நேற்று முழுமையாக நிறைவடைந்தது. இதன் மூலம் 269 ஹெக்டயார் கொண்ட புதிய நிலப்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளதோடு துறைமுக நகரின் இரண்டாம் கட்டத்திற்கான சகல நடவடிக்கைகளையும் ஆரம்பிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்தது.

மண் நிரப்பும் பணிகள் நிறைவடைவதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு அமைச்சர் சம்பிக்க ரணவக்க,சீன தூதுவர் சேங் சுயோயுவான் போர்ட் சிட்டி நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் ஜியாங் ஹவுலியாங் ஆகியோரின் பங்களிப்புடன் நேற்று காலை துறைமுக நகரில் இடம்பெற்றது.

போட்ர் சிட்டி நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

28 மாத காலத்தில் மண் நிரப்பி புதிய நகரை உருவாக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதோடு சில பிரதேசங்களில் 30 மீட்டர் ஆழமான கடற்பகுதியில் மணல் நிரப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணல் நிரப்பும் பணியில் 4 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்ததோடு இறுதிப் படகு நேற்று தனது பணியை நிறைவு செய்து பிரியாவிடை பெற்றுச் சென்றது.

இந்தத் திட்டத்திற்கு மொத்தமாக 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட இருப்பதோடு நவீன வசதிகளுடன் கூடிய புதிய நகரமாக இந்த நகரம் உருவாக்கப்பட இருப்பதாக திட்டப்பணிப்பாளர் நிஹால் தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு வீதிகள்,பாலங்கள் என்பன நிர்மாணிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

துறைமுக நகரில் உருவாக்கப்படும் 5 உப வலயங்களும் நிதி மாவட்டம்,பூங்க அண்டிய வாழ்விடம், தீவக வாழ்விடம்,கடற்கரை மற்றும் சர்வதேச தீவு என பிரிக்கப்படும்.

மொத்த நிலப்பரப்பில் 91 ஹெக்டயார் பிரசேதம் பொது வான பிரதேசமாக அபிவிருத்தி செய்யப்படும் அதே வேளை அரசாங்கத்திற்கு ஒதுக்கும் பகுதி முதலீட்டாளர்களுக்கு 99வருட குத்தகைக்கு வழங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க

குறிப்பிட்டதாவது,

மூன்று வருடகாலத்தினுள் சகலருக்கும் செவிசாய்த்து துறைமுக நகரை கட்டியெழுப்ப முடிந்தது நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.

இலங்கையின் அபிவிருத்தி வரலாற்றில் இன்று முக்கிய நாளாகும். துறைமுக நகரின் முதலாவது கட்டம் நிறைவடைகிறது.மண் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது.

இந்த கருத்திட்டம் தொடர்பில் பல்வேறு அச்சங்கள் முன்வைக்கப்பட்டன.சர்வதேச ரீதியில் நாட்டின் பாதுகாப்பு,நாட்டின் இறைமை,சுற்றாடல் பிரச்சினை முன்வைக்கப்பட்டன.

பல நூற்றாண்டுகளாக களு கங்கை மற்றும் களனி கங்கை என்பவற்றில் இருந்து கடலுடன் கலந்து மணல் மேடுகளை மீள நாம் இந்த துறைமுக நகரில் புதைத்துள்ளோம். 70 மில்லியன் கியூபிக் மீட்டர் மணல் இங்கு கொட்டப்பட்டுள்ளது.

மிக விரைவில் நகர பூங்காவொன்றை உருவாக்க இருக்கிறோம். 4 பிரதான பிரதேசங்களில் சர்வதேச நிதி மத்திய நிலையம்,சர்வதேச பாடசாலை,சர்வதேச மருத்துவமனை ,சர்வசேத மாநாட்டு மண்டபம் என்பவற்றை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த சமுத்திரத்தில் பிரதான பொருளாதார மத்திய நிலையமாக துறைமுக நகரை கட்டியெழுப்புவோம்.

புதிய கொழும்பு நகரமொன்றை உருவாக்கும் திட்டத்தின் ஆரம்பக் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு சீன தூதுவரும் உரையாற்றினார்.(பா)

Thu, 01/17/2019 - 06:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை