மன்னார் உதவிக்கரம் அமைப்பின் 20ஆண்டு நிறைவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

மன்னார் கரிற்றாஸ்- வாழ்வுதயத்தின் ஒரு பிரிவாகிய உதவிக்கரப் பிரிவு உதயமாகி 20ஆண்டுகள் நிறைவையொட்டி விசேட நிகழ்வுகள் இன்று (31) காலை கரிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை செ. அன்ரன் அடிகளாரின் தலைமையில் உதவிக்கர நிலையத்தில் இடம்பெற்றது.

1999ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட உதவிக்கரம் அமைப்பானது யுத்தம் காரணமாகவும் இயற்கை உபாதை, பிறவி குறைபாடு மற்றும் விபத்தினால் அங்கங்களையும் உள் உறுப்புக்களையும் இழந்தவர்களுக்கான உதவிகள் மற்றும் மாற்று அங்கங்களை வழங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு மீள் வாழ்க்கை வழங்கும் நிறுவனமாக செயற்படுகின்றது.

அமைப்பின் 20வது வருட பூர்த்தியை முன்னிட்டு 20வருடங்களாக உதவிக்கரம் அமைப்பினால் நன்மையடைந்த பயனாளர்களை ஒன்று திரட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியொன்றும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து உதவிகரம் அமைப்பில் சக்கர நாற்காலி மதிப்பிடல்,பொறுத்துதல் பிரிவு ஆரம்ப நிகழ்வும் இடம்பெற்றதுடன் தெரிவு செய்யப்பட்ட புதிய பயனாளர்களுக்கான சக்கர நாற்காலி மற்றும் மாற்று நிலை உபகரணங்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்ராஸ், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார், மன்னார் பிரதேச செயலாளர் முன்னை நாள் உதவிகர அமைப்பின் இயக்குனர்கள், ஊழியர்கள் மற்றும் பயனாளர்களும் கலந்து கொண்டனர்.

(மன்னார் குறூப் நிருபர்– லம்பர்ட் ரொசாரியன்)

 

  

 

Thu, 01/31/2019 - 15:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை