பிலிப்பைன்ஸ் தேவாலயத்தில் இரட்டை குண்டு: 20 பேர் பலி

தெற்கு பிலிப்பைன்ஸில் ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற இரட்டை குண்டு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.  

இஸ்லாமிய போராளிகள் ஆதிக்கம் கொண்ட, ஜோலோ தீவில் உள்ள தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது முதல் கண்டு வெடித்துள்ளது.  

அங்கு படையினர் விரைந்தபோது வாகனத் தரிப்பிடத்தில் இரண்டாவது குண்டு வெடித்துள்ளது.  

பிலிப்பைன்ஸின் முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள பிராந்தியத்திற்கு அதிக சுயாட்சி வழங்கும் வாக்கெடுப்பில் அந்த பிராந்திய மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு சில தினங்களின் பின்னரே இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  

இந்த தாக்குதல் தொடர்பில் எந்த குழுவும் இதுவரை பெறுப்புக் கூறவில்லை.

அபூ சையாப் உட்பட பல கிளர்ச்சிக் குழுக்களின் தளமாக ஜோலோ தீவு நீண்ட காலமாக இயங்கி வருகிறது.  

இந்த குண்டு தாக்குதலுக்கு இலக்கான தேவாலயம் கடந்த காலங்களிலும் இவ்வாறான தாக்குதல்களுக்கு முகம்கொடுத்துள்ளது. இதில் அதிகம் பொதுமக்களே கொல்லப்பட்டுள்ளனர்.  

இதில் காயமடைந்த 48 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

“குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும் பொதுமக்கள் கூடும் இடம், வழிபாட்டுத் தலங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம் இடம்பெற்ற சுயாட்சி அதிகாரத்திற்கான வாக்கெடுப்பில் தெற்கு பிராந்தியத்தில் முஸ்லிம் பகுதிகளில் ஆதரவாக வாக்குகள் பதிவானபோதும் ஜோலோ தீவு அமைந்திருக்கும் சுலு மாகாணம் அதிக சுயாட்சியை நிராகரித்து பெரும்பான்மை வாக்குகள் பதிவாகி இருந்தன.      

Mon, 01/28/2019 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை