2020 ரி20 உலகக் கிண்ண நேரடி தகுதியை இழந்தது இலங்கை அணி

Azaff Mohamed
2020 ரி20 உலகக் கிண்ண நேரடி தகுதியை இழந்தது இலங்கை அணி-Sri Lanka Misses Direct Entry to WCT20-2020

தரவரிசையில் 9 ஆது இடம் என்பதே காரணம்

2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள ரி20 உலக்கிண்ண போட்டிகளுக்கான நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இழந்துள்ளன.

சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிகளுக்கமைய, உலகக் கிண்ண தொடருக்கு சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கான ரி20 தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளே நேரடியாக உலக்கிண்ண தொடருக்கு தகுதி பெறுவதோடு மேலும் 4 அணிகள் குழுநிலை தகுதிகாண் போட்டிகள் மூலம் உலகக்கிண்ண ரி20 போட்டிகளுக்கு தகுதி பெறும்.

அந்த வகையில் பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக 2020 உலகக் கிண்ண ரி20 தொடரின் 12 அணிகள் மோதும் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

மூன்று முறை உலகக்கிண்ண ரி20 தொடரில் தகுதி பெற்ற மற்றும் ஒருமுறை சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி, 2018 டிசம்பர் 31 ஆம் திகதி பட்டியல்படுத்தப்பட்ட தரவரிசையில் 9 ஆவது இடத்தையே பிடித்துள்ள காரணத்தினாலும் பங்களாதேஷ் அணி 10 ஆம் இடத்தை தக்கவைத்த காரணம்தினாலும் அவை இரண்டும் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளன.

அந்த வகையில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளும் 2020 ஒக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை இடம்பெறவுள்ள தகுதிகாண் போட்டிகளில் பங்குபெறவேண்டியுள்ளது. இத்தகுதிகாண் போட்டிகளில் மொத்தமாக 6 அணிகள் பலப்பரீட்சை நடாத்தவுள்ளதோடு, அதில் 4 அணிகள் தெரிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இலங்கை ரி20 அணித்தலைவர் லசித் மாலிங்க கருத்துத் தெரிவிக்கையில் “ உலகக்கிண்ண தொடருக்கு நேரடியாக தகுதி பெறாமையானது ஏமாற்றத்தை அளிக்கின்றது. ஆனால் உலக்கிண்ண தொடரில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அனைத்து அணிகளும் முதல் 8 இடங்களுக்குள் வரவதற்கே எதிர்பார்க்கும். எனினும் நாம் இந்த மேலதிக போட்டிகளை சிறப்பாக பயன்படுத்தி நொக் அவுட் சுற்றுக்களுக்கு தயாராக வேண்டும்”

பங்களாதேஷ் அணித்தலைவர் சகிப் அல் ஹசன் கருத்துத்தெரிவிக்கையில் “ உலகக்கிண்ண தொடரிற்கு நேரடியாக தகுதி பெறாமைக்கு எந்த காரணங்களையும் சொல்ல முடியாது. உலக்க்கிண்ண ரி20 தொடர் நடைபெற இன்னமும் கால அவகாசம் உண்டு. அதனைப் பயன்படுத்தி உலகக்கிண்ண தொடருக்கு எம்மை சிறந்த முறையில் தயார் செய்வோம். அண்மையில் உலக ரி20 சம்பியன்களான மேற்கிந்தியத்தீவுகள் அணியை அவர்களது சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி தொடரைக்கைப்பற்றியமை எமக்கு அளப்பறிய நம்பிக்கையை. அளித்துள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tue, 01/01/2019 - 17:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை