நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2019ல் அதிகரிக்கும்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2018 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 2019ம் ஆண்டில் அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டுக்கான நாணய மற்றும் நிதித்துறை கொள்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்று இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றது. மேற்படி கொள்கை வெளியீட்டையடுத்து உரையாற்றிய போதே அவர் மேற்கூறியவாறு தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 சதவீதமாக இருந்தது.

ஆனால் சர்வசே நாணய நிதியமும் உலக வங்கியின் எமது பொருளாதார வளர்ச்சி வீதம் 3.5 சத வீதத்துக்கும் 4 சதவீதத்துக்குமிடையில் இருந்ததாகக் கூறின. அது சரியாக இருக்கும் என்றுதான் நானும் நினைக்கின்றேன் என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் வருடாந்த மொத்த உள்ளூர் உற்பத்தியை கணக்கிட புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த கணக்கெடுத்தலில் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் போக்குவரத்து துறை ஆகியவற்றின் பங்களிப்பு மேற்படி கணக்கிடலில் உள்ளடக்கப்பட்டதா என்பது உறுதியாகக் கூற முடியாதுள்ளது. எனினும் இது குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய முறை என்பதால் அதனை சீராக செயற்படுத்த இன்னும் சில காலம் செல்லும் என்று அவர் அங்கு குறிப்பிட்டார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவது குறித்து கேட்கப்பட்ட போது, அது சீராவதற்கு இன்னும் சில காலம் செல்லும். எனினும் இது தொடர்பான சில சாதகங்களை இப்போது காண முடிகிறது. எமது நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதனால் எண்ணெய் மூலமான மின் உற்பத்தி குறையும். அது மேற்படி மின் உற்பத்திக்குத் தேவையான எண்ணெய் இறக்குமதியை குறைக்கும். அத்துடன் அரசாங்கம் செலவுகளை குறைத்துக்கொள்ளல், ஏற்றுமதியை அதிகரித்தல் மற்றும் வெளிநாட்டு நேரடி இறக்குமதியை அதிகரித்தல் ஆகிய செயற்பாடுகள் இலங்கை ரூபாவின் வீழ்ச்சியை கடடுப்படுத்தும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு வழங்க முடியாதவாறு ஏற்றுமதி இறக்குமதி செலுத்தல் வேறுபாடு மிகை வீழ்ச்சியடைந்திருந்த நிலையிலும் 2015 இல் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதியை வழங்கியிருந்தது. அதேநேரம் இந்த வசதியின் ஐந்து தொகுதிகள் ஏற்கனவே இலங்கைக்கு கிடைத்திருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியையடுத்து மூன்று பிரதான கடன் வழங்கும் முகவர்களும் இலங்கையின் கடன் பெறும் நிலையை குறைத்து மதிப்பிட்டிருந்தன. எமது அரசியல் நெருக்கடி காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டபோதும் எமது பாரிய பொருளாதார கொள்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லாதிருந்ததாலேயே சர்வதேச நாணய நிதியத்தின் விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதி கிடைத்தது. சர்வதேச நாணய நிதியத்தின் மேற்படி வசதி திட்டத்தை 2019 இல் முழுமைப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.

Thu, 01/03/2019 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை