மத்தியதரைக் கடலில் கப்பல்கள் மூழ்கி 170 பேர் வரை உயிரிழப்பு

மத்தியதரைக் கடலில் அகதிகள் கப்பல்கள் மூழ்கிய இருவேறு சம்பவங்களில் சுமார் 170 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக ஐ.நா அகதிகளுக்கான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  

லிபிய கடற்கரைக்கு அப்பால் 120 பேருடன் கப்பல் ஒன்று மூழ்கியதாக இத்தாலி கடற்படை குறிப்பிட்டிருப்பதோடு மத்தியதரைக் கடலின் மேற்கில் காணாமல்போன கப்பல் ஒன்றை மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.  

இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை ஐ.நா அகதிகள் நிறுவனத்தினால் உறுதி செய்ய முடியாதுள்ளது. மத்தியதரைக் கடலை கடக்க முயன்று 2018 ஆம் ஆண்டில் 2,200 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

“ஐரோப்பிய வாயிலில் அதிகமானவர்கள் உயிரிழப்பதை எம்மால் கண்மூடி பார்த்திருக்க முடியாது” என்று ஐ.நா அகதி உயர்ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.  

53 பேரோடு பயணித்துக்கொண்டிருந்த கப்பலொன்று, மத்திய தரைக்கடலின் மேற்குப்பகுதியிலுள்ள அல்போரான் கடற்பரப்பில் காணாமல் போனதாக கூறப்படுகிறது.  கப்பல் கவிழ்ந்தபோது உயிர் தப்பி சுமார் 24 மணிநேரங்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒருவர் காப்பாற்றப்பட்டு மொரோக்கோவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். 

இரண்டாவது கப்பல் கடந்த சனிக்கிழமையன்று லிபியாவிலிருந்து புறப்பட்டதாக இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. 

அந்த கப்பல் லிபியாவின் கரபுள்ளி என்னுமிடத்திலிருந்து புறப்படும்போது அதில் 120 பேர் இருந்ததாக விபத்திலிருந்து உயிர் பிழைத்த மூன்று பேர் தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் பிளாவியோ டி கியாகோமோ கூறியுள்ளார். 

அண்மைய ஆண்டுகளாக இத்தாலி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றன. 

இந்த சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ள இத்தாலியின் துணை பிரதமர் மட்டாயோ சால்வினி, “ஐரோப்பாவின் துறைமுகங்கள் திறந்திருக்கும் வரை, துரதிருஷ்டவசமாக கடத்தல்காரர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.     

Mon, 01/21/2019 - 12:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை