நீதிமன்றம் சென்றாவது 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவேன்

புதிய ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்  

அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை கிழக்கு மாகாணத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்த நீதிமன்றம் சென்றாவது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண புதிய  ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  

 ஒரு சமூகத்திற்கான ஆளுநராக செயற்படப் போவதில்லை எனவும் தெரிவித்த அவர், முறண்பாடுகளைக் களைந்து இன ஐக்கியத்துடன் கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.   காத்தான்குடியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை அவருக்களிக்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்:  

கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற எந்தவொரு சமூகமும் அச்சப் படத்தேவையில்லை. நான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதையிட் டுப் பெருமைப்படுங்கள்.என்னை விமர்சிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அன்பாக ஒரு அழைப்பை விடுக்க விரும்புகின்றேன். தயவு செய்து முரண்பாடுகளை  மறந்து ஒற்றுமைப்பட்டு கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபடுங்கள்.

எதிர்வரும் ஒரு வருட காலத்தில் பெறுமதி மிக்க பல்வேறுபட்ட தொழிற்சாலைகளை நிறுவுவதுடன் மூடிக்கிடக்கும் தொழிற் சாலைகளை மீண்டும் திறந்து  வளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்திகளை மேற்கொள்வோம். 

ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் அனைவரிடமும் கடந்த இரண்டு நாட்களாகப் பேசி கலந்துரையாடி அவர்களின் ஆசீர்வாதங்களை பெற்றுள்ளேன்.  

 மாகாண அதிகாரங்கள் மத்திய அரசிலுள்ள அதிகாரங்கள் வெளிநாட்டு உதவிகள் எல்லாவற்றையும் பெற்று சுபீட்சமான ஒரு புதிய யுகத்திலே எதிர் காலத்தை நோக்கி பயணிக்க அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். முழுமையான அதிகாரத்தை 13ஆவது சரத்து மாகாண சபைக்கு வழங்கியு ள்ளது. ஆனால், மத்திய அரசு இடைக்கிடையே கொண்டு வந்த சுற்று நிரூபங்கள் வர்த்தமானி அறிவித்தல்கள்  13வது சரத்தை முழுமையாக அமுல் படுத்தாமல் தடை விதித்துள்ளது.

நான் ஒருவருடம் மாத்திரம் தான் ஆளுநராக இருப்பேன். அந்த ஒரு வருட காலத்திற்குள் 13ஆவது சரத்தை படிப்படியாக அமுல்படுத்த தீர்மானித்துள்ளேன்.  

அதில் பிரச்சினை வருகின்ற போது அவற்றைத் தீர்ப்பதற்கு முயற்சிப்போம். 13ஆவது சரத்திலே சொல்லப்பட்ட விடயங்களைத் தடுக்கின்ற அதிகாரம் யாருக்கும் கிடையாது. அது ஜனாதிபதிக்கும் கிடையாது. ஆளுநருக்கும் கிடையாது. ஆனால், அவை முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வில்லை.  

தேவையேற்படின் ஆளுநர் என்ற அடிப்படையில் நீதிமன்றம் சென்றாவது இந்த 13வது சரத்தை இந்த மாகாணத்தில் நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வேன்.  

கிழக்கு மாகாண சபையை மூவின மக்களும் ஆளக் கூடிய நிருவாக கட்டமைப்பை உருவாக்கி அதன் ஊடாக இந்த மாகாண மக்கள் நிம்மதியான ஒரு நல்ல எதிர் காலத்தை உருவாக்குவதற்கு என்னோடு ஒன்று சேர்ந்து செயற்பட முன் வர வேண்டும்.  சகல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சகல சமூகங்களின் தலைவர்கள் புத்தி ஜீவிகள் கல்விமான்கள் அதிகாரிகள் செயலாளர்கள் அரசாங்க அதிபர்கள் பிரதேச செயலாளர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் எல்லோரையும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.  

மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். மாளிகையில் இருந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாது.  

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)  

Wed, 01/09/2019 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை