கிண்ணியாவில் பதற்றம்: பொதுமக்களுடன் ஏற்பட்ட மோதலில்12 கடற்படையினர் காயம்

- மணற்கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க அதிரடிப்படை- கடற்படை திடீர் பாய்ச்சல்

- ஆற்றினுள் பாய்ந்த இருவர் உயிரிழப்பு

கிண்ணியா கங்கை சாவத்து பாலத்துக்கருகில் நேற்று முற்பகல் பெரும் பதற்றம் ஏற்பட்டது. சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்கு விசேட அதிரடிப்படையினரும் கடற்படையினரும் நடவடிக்கை எடுக்க முற்பட்டபோதே இந்தப் பதற்றம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய முற்பட்ட போது அவர்களில் மூவர் மகாவலி ஆற்றில் பாய்ந்துள்ளனர்.இவர்களில் இருவர் காணாமல் போனதுடன் மற்றொருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

முஹம்மது ரபீக் - பாரீஸ் (வயது -23) என்பவரது சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. பஸீர் மொஹமட் ரபீக் (வயது 19) என்ற நபரின் சடலம் தேடப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அதிரடிப்படை மற்றும் கடற்படையினருடன் பொது மக்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

 நிலைமையைக் கட்டுப்படுத்த கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலை மற்றும் கைகலப்பினால் 12கடற்படை வீரர்கள் காயமடைந்ததாகவும் இதில் எட்டுப்பேர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் திருமலை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று முற்பகல் 10.30அளவில் இடம்பெற்றுள்ளது.

கடற்படையினரால் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுவருபவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கந்தகாடு பிரதேசத்திலும் பாரிய மணற் கொள்ளையில் ஈடுபட்டு வந்த  சிலரது 6வள்ளங்களை கடற்படையிர் நேற்று முன்தினம் கைப்பற்றினர். நேற்று அதிகாலை இரண்டு லொறிகளுடன் 7பேரையும் கடற்படையினர் கைது செய்தனர். அத்துடன் மீண்டும் நேற்றுக் காலை இதே பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக குறிப்பிடப்படும் மூன்று வர்த்தகர்களை கைது செய்யும் நோக்கில் கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று தேடுதலை முன்னெடுத்திருந்தனர். இதனைக் கண்டித்த வர்த்தகர்கள் ஊர்மக்களுடன் இணைந்து நேற்று காலை பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

எனினும் இதனை பொருட்படுத்தாத கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மூன்று வர்த்தகர்களையும் கைது செய்ய முயற்சித்தபோது அவர்கள் தப்பி பிழைக்கும் நோக்கில் ஆற்றில் பாய்ந்துள்ளனர். இதில் ஒருவர் மீட்கப்பட்டபோதும் ஏனைய இருவரும் காணாமற்போயுள்ளனர்.

இதனால் குழப்பமடைந்த ஊர் மக்கள் கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படையினரின் செயற்பாடு காரணமாகவே இரண்டு வர்த்தகர்களும் காணாமற்போனதாகக் கூறி பெரும் களேபரத்தை உண்டு பண்ணினர். இதனால் நேற்றுக் காலை அப்பகுதியெங்கும் பெரும் பதற்றம் நிலவியது.

இதனையடுத்து ஊர் மக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். சம்பவ இடத்துக்கு மேலதிக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன்  அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் ஊர்மக்கள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கையில் கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

காணாமற்போன இருவரையும் தேடி கடற்படையினர் ஊர்மக்களுடன் இணைந்து ஆற்றில் தேடுதல் நடத்தி வருகின்றனர்.

காணாமற்போன இருவரும் கிண்ணியா இடுமன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

சட்ட விரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள உறுதிமொழியை வெற்றிகரமாக அமுல்படுத்தும் நோக்கில் கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மகாவலி கங்கைக்கு அண்மித்த கரையோரங்களில் பாரிய சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே நேற்றைய தினமும் கந்தகாடு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கந்தகாடு பிரதேசத்தில் 28மற்றும் 29ஆகிய இரு தினங்களும் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களின்போது மணற்கொள்ளையில் ஈடுபட்ட 07பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 28படகுகளும் 02லொறிகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மணல் ஏற்றியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்துவதற்காக அவர்கள் திட்டமிட்ட வகையில் இவ்வாறு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவ்விடத்துக்கு பொலிஸார், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் சென்றதையடுத்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

(திருமலை மாவட்ட விசேட, ரொட்டவெவ குறூப், கந்தளாய் தினகரன் நிருபர்கள்)

Wed, 01/30/2019 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை