ரூ. 1,000 கிடைக்கும் வரை சகல எம்.பிக்களும் சபையை பகிஷ்கரிக்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்கும்வரை பெருந்தோட்டப் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தை பகிஷ்கரிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கோரிக்கை விடுத்தார்.

தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்கும்வரை பாராளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாரா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜே.வி.பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தோட்டத்தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குழுவொன்றை அமைத்து சம்பளப் பிரச்சினைக்காகப் போராட வேண்டும். தற்போதைய அரசாங்கத்தில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து போராடவேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும்வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளங்களைப் பெறக் கூடாது, சபை நடவடிக்கைகளைப் புறக்கணிக்க வேண்டும். அது மாத்திரமன்றி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிப்பவர்கள் அதனை உதறிவிட்டு போராட்டத்தில் இறங்க வேண்டும்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்குவோம். இம்மாதம் 31ஆம் திகதி அல்லது பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு வழங்காவிட்டால் பெருந்தோட்டத்துறை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் ஒன்றிணைந்து புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

அதனைவிடுத்து, பாராளுமன்றத்தைக் கூட்டி ஒருநாள் முழுவதும் விவாதம் நடத்துவதால் எந்தத் தீர்வுக் கிடைத்துவிடாது. இது வெறுமனே மக்களை ஏமாற்றும் செயற்பாடாகவே அமையும். மலையகப் பகுதிகளில் உள்ள சிங்கள கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தாலும், தமிழ் மக்கள் வாழும் கிராமங்கள் ஏன் அபிவிருத்தி செய்யப்படாதிருக்கின்றன என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Fri, 01/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை