1,000 ரூபா சம்பள போராட்டம் காட்டிக்கொடுப்பு

தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை தொழிற்சங்ககங்களும் அரசாங்கமும் இணைந்து காட்டிக் கொடுத்துள்ளதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.1,000 ரூபா சம்பள உயர்வு வழங்க முதலாளிமார் தயாராக இல்லாவிட்டால் அவர்கள் வழங்கும் தொகையுடன் எஞ்சிய தொகையை அரசாங்கம் பெற்றுக்கொடுத்து 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியிருக்க வேண்டும் எனவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.700 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கும் வகையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் நளின் ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டதாவது:

தோட்டத் தொழிலாளர்கள் வீட்டு வசதியோ போக்குவரத்து, சுகாதார வசதிகளோ இன்றி கஷ்டப்படும் நிலையில் 1,000 ரூபா சம்பளமும் போதுமானதல்ல. ஆனால் 1,000 ரூபா பெற்றுத் தருவதாக வாக்களித்த தொழிற்சங்கங்கள் அதனை காட்டிக் கொடுத்து விட்டு 700 ரூபா பெற ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளன. சிறிய சம்பள அதிகரிப்பே வழங்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது. எஞ்சிய தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும்.

1,000 ரூபா கோரி தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஜே.வி.பி முழு ஆதரவு வழங்குகிறது. தோட்டங்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கும் தொழிற் சங்கங்களே இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இவர்களிடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

முதலாளிமார் பெரிய இலாபம் பெற்று சொகுசு வாழ்வு வாழ்கையில் தோட்ட மக்கள் சிறிய சம்பளத்திற்கு தினமும் செத்துச் செத்து பிழைக்கின்றனர். இவர்களின் போராட்டம் நியாயமானது. நாமும் அவர்களின் போராட்டத்தில் இணைந்து கொள்கிறோம். தோட்டத் தொழிலாளர்கள் ஒரு வருடத்தில் உழைக்கும் தொகையை விட அதிக தொகையை தொழிற்சங்கத் தலைவர்கள் ஒருநாள் மதுபானத்திற்காக செலவிடுகின்றனர். இந்த தொழிற்சங்கங்கள் ஒருநாளும் 1,000 ரூபா பெற்றுக் கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 01/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை