பெப். 04 கைதான அலோசியஸ், பலிசேனவுக்கு இன்று பிணை

Rizwan Segu Mohideen
பெப். 04 கைதான அலோசியஸ், பலிசேனவுக்கு இன்று பிணை-CBSL Bond Scam-Aloysius Palisena Released on Bail

- 10 மாத விளக்கமறியலின் பின் பிணை
- பிரதான குற்றவாளியான மஹேந்திரன் கைது செய்யப்படவில்லை; வழக்கு நீண்டு செல்வதால் பிணை

மத்திய வங்கி முறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை இன்று (01) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவர்களுக்கு பிணை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த இருவரையும் தலா ரூபா 10 இலட்சம் ரொக்கம்  மற்றும் ரூபா 20 லட்சம் கொண்ட நான்கு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

இது தவிர அவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு (CID) வந்து கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில், கடந்த வருடம் பெப்ரவரி 04 ஆம் திகதி அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பத்து மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு விசாரணையின் பிரதான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜுன் மஹேந்திரன், இதுவரை கைது செய்யப்படாத நிலையில், இவ்வழக்கானது எப்போது நிறைவு செய்யப்படும் என்பது தொடர்பில் உறுதியாக கூறமுடியாதுள்ள நிலையில் சந்தேகநபர்கள் இருவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பது நீதியான விடயமன்று என்பதால் அவர்கள் இருவருக்கும் பிணை வழங்க முடிவு செய்துள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இதன்போது அறிவித்தார்.

அத்துடன் இதற்கு முன்னர் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவருக்கும் பிணை வழங்குவது தொடர்பில் சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல எதிர்ப்பை நிராகரித்த நீதவான், அவர்களின் மனைவிமார் மற்றும் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் உளநலம் ஆகியவற்றை விசேட கவனத்திற்கொண்டு வழங்குவதாக அறிவித்தார்.

Wed, 01/02/2019 - 19:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை