முதலாவது Thepapare சம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்ற புனித ஜோசப் கல்லூரி

ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியுடனான Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விறுவிறுப்பான பெனால்டி ஷுட் அவுட் முறையில் 6- – 5 என வெற்றி பெற்ற புனித ஜோசப் கல்லூரி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

கொழும்பு, சுகததாச அரங்கில் (16) நடைபெற்ற போட்டியின் முழு நேரம் முடிவடையும்போது இரு அணிகளும் 1- – 1 என சமநிலையுற்ற நிலையிலேயே ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது.

அரையிறுதிப் போட்டியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியை 2- – 1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியே புனித ஜோசப் கல்லூரி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த தொடரில் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹமீட் அல் – ஹுஸைனி கல்லூரி புனித பத்திரிசியார் கல்லூரியை 1- – 0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

போட்டியின் ஆரம்பத்திலேயே புனித ஜோசப் கல்லூரியின் சலன பிரமன்த பந்தை வேகமாக கடத்திவந்து ஹமீட் அல் ஹுஸைனி வலைக்குள் செலுத்த முயன்றபோது கோல்காப்பாளர் அதனை சிறப்பாக தடுத்தார்.

எனினும் அரங்கம் எங்கும் ஹமீட் அல் – ஹுஸைனி கல்லூரி ஆதரவாளர்கள் கோசம் எழுப்ப அந்த அணி வீரர்கள் பந்தை வேகமாக கடத்திச் சென்று நீண்ட தூரத்திற்கு பந்தை பரிமாற்றியும் புனித ஜோசப் வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.

போட்டியின் 13ஆவது நிமிடத்தில் ஹமீடியா வீரர் அமான் வலையை நோக்கி வேகமாக உதைத்த பந்தை புனித ஜோசப் கோல்காப்பாளர் சிறப்பாக தடுத்தார்.

எனினும் பந்தை நேர்த்தியாக பரிமாற்றிய புனித ஜோசப் வீரர்கள் அடிக்கடி எதிரணி கோல் கம்பத்தை ஆக்கிரமிப்பதை பார்க்க முடிந்தது. செனால் சன்தோஷ் 18ஆவது நிமிடத்தில் ஹமீட் அல் – ஹுஸைனி பெனால்டி எல்லையில் தற்காப்பு வீரர்களை முறியடித்து பந்தை கடத்திச் சென்றபோதும் அவரால் அதனை கோலாக மாற்ற முடியாமல்போனது. இந்நிலையில் அமான் 24ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒருமுறை தொலைவில் இருந்து கோலை நோக்கி உதைத்த பந்தை புனித ஜோசப் கோல்காப்பாளர் மீண்டும் ஒருமுறை சிறப்பாக தடுத்தார். அடுத்த நிமிடமே புனித ஜோசப் வீரர்களும் கோல் முயற்சி ஒன்றில் ஈடுபட்டபோதும் பந்து கம்பத்திற்கு வெளியால் பறந்தது. தொடர்ந்து செனால் சன்தீஷுக்கு கோல் பெறும் வாய்பொன்று கிடைத்தபோதும் அவர் அவசரப்பட்டு உதைத்ததால் பந்து வெளியே சென்றது.

இந்நிலையில் மொஹமட் ரிஸான் புனித ஜோசப் பெனால்டி பெட்டிக்குள் பந்தை அதிரடியாக கடத்திச் சென்றபோதும் அதனை கோலாக பூர்த்தி செய்வதற்கு அவருக்கு முடியாமல்போனது.

இரு அணிகளும் மாறிமாறி பந்தை பெற்று கோல் முயற்சிகளில் ஈடுபட்டபோதும் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவடைந்தது.

சற்று மந்தமாக ஆரம்பமான இரண்டாவது பாதி ஆட்டத்தில் புனித ஜோசப் கல்லூரிக்கு முதல் கோல் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. 49ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லையில் இடது பக்கமாக பந்தை கடத்தி வந்த சலன பிரமன்த எதிரணி கோல் கம்பத்திற்கு நெருக்கமாக இருக்கும் சக வீரரிடம் பந்தை கொடுத்தபோதும் அவர் சரியான நேரத்திற்கு பந்தை நோக்கி வரவில்லை.

ஹமீட் அல் – ஹுஸைனி முன்களம் அடுத்தடுத்து இரண்டு முறை பந்தை உயர செலுத்தி கோல் பெற முயன்போதும் அவை நூலிழையில் தவறின.

இந்நிலையில் போட்டியின் 56ஆவது நிமிடத்தில் சமித் ரஷ்மித்த எதிர்பாராத கோல் ஒன்றை போட்டார். மைதானத்தின் வலது பக்கமாக தொலைவில் இருந்து உயரத் தட்டிவிட்ட பந்து சென்று ஹமீட் அல் – ஹுஸைனி கோல்காப்பாளருக்கு பிடிக்க முடியாமல் வலைக்குள் விழுந்தது.

இதன் மூலம் புனித ஜோசப் கல்லூரி 1- – 0 என முன்னிலை பெற்றது

இந்த கோலை அடுத்து ஹமீட் அல் ஹுஸைனி பதில் கோல் பெறுவதற்கு அவசரம் காட்ட, புனித ஜோசப் கோல் எல்லையை அடிக்கடி ஆக்கிரமித்து ஹமீட் அல் – ஹுஸைனி தொடர்ந்து நெருக்கடி கொடுத்தது. 70ஆவது நிமிடத்தில் அப்கர் எதிரணி பெனால்டி எல்லைக்குள் பந்தை வேகமாக கடத்திச் சென்றபோது புனித ஜோசப் பின்கள வீரரினால் தடுக்கப்பட்டு கீழே வீழ்ந்தார்.

இதனால் ஹமீட் அல் – ஹுஸைனி அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து அரங்கே அதிர்ந்தது. அந்த ஸ்பொட் கிக்கை துவான் நதீர் வேகமாக உதைத்து கோலாக மாற்றினார். போட்டி 1 – -1 என சமநிலையானதை அடுத்து ஆட்டம் விறுவிறுப்படைந்தது. 78 ஆவது நிமிடத்தில் வைத்து அப்கர் எதிரணி கோல் எல்லைக்கு அருகில் வைத்து பரிமாற்றிய பந்தை கோலாக திருப்பும் பொன்னான வாய்ப்பை சக வீரர் தவறவிட்டார்.

இரு அணிகளும் வெற்றி கோலை போடாத நிலையில் வழங்கப்பட்ட மூன்று நிமிட மேலதிக நேரத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. அந்த மேலதிக நேரத்தில் ஹமீட் அல் – ஹுஸைனி வீரர்கள் கோல் பெறுவதற்கு கடுமையாக போராடியபோதும் அது வெற்றி அளிக்கவில்லை. இதனால் போட்டி பெனால்டி ஷுட் அவுட் முறைக்கு சென்றது.

வெற்றியை தீர்மானிப்பதற்கு வழங்கப்பட்ட பெனால்டி ஷுட் அவுட்டில் இரு அணிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. புனித ஜோசப் அணியின் முதல் பெனால்டியை சொனால் சன்தேஷ் வலைக்குள் செலுத்திய நிலையில் ஹமீட் அல் – ஹுஸைனி சார்பில் பதில் வீரர் அஜித் பிரசான்த் முதல் பெனால்டியை தவறவிட்டார். தொடர்ந்து மாறி மாறி பந்தை வலைக்குள் செலுத்திய நிலையில் ஹமீட் அல் ஹுஸைனி வீரர் மொஹமட் ரிசாட் உதைத்த பெனால்டியை புனித ஜோசப் கோல்காப்பாளர் சிறப்பாக தடுத்தார்.

தொடர்ந்து காவிந்த ரூபசிங்கவும் பெனால்டியை தவறவிட 3- – 1 என போட்டி ஹமீட் அல் – ஹுஸைனி பக்கம் திரும்பி இருந்தது. எனினும் அமால் பைசல் ஹமீட் அல் – ஹுஸைனிக்கு கோல் போட சமத் ரஷ்மித்த பந்தை வலைக்கு செலுத்த தவறினார். இதனைத் தொடர்ந்து மொஹமட் பெனால்டி பெற 3-3 என சமநிலையானது.

இரு அணிகளும் அடுத்தடுத்து வலைக்குள் பந்தை செலுத்த ஹமீட் அல் – ஹுஸைனி கோல்காப்பாளர் சப்ரின் தனது பெனால்டி வாய்ப்பை தவறவிட்டதை அடுத்து புனித ஜோசப் கல்லூரியின் வெற்றி உறுதியானது. இதன்படி அந்த அணி 6-5 என்ற கோல்கள் கணக்கில் முதலாவது Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்றது.

Tue, 12/18/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை