தலைவர்களின் தனிப்பட்ட தேவைக்காக அரசியலமைப்பு தயாரிக்கப்படக் கூடாது

அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட தேவைக்காக அரசியலமைப்பு தயாரிக்க முடியாது. நாட்டில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான தேவை உணரப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த முயற்சி எந்தவோர் அரசியல் தலைவரினதும் தனிப்பட்ட தேவையை நிறைவேற்றும் வகையில் அமையக்ககூடாது என அவர் குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக ஜே.வி.பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டில் தற்பொழுது மூன்று அரசியல் தலைவர்கள் மீது அதிக கவனம் குவிந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய மூன்று தலைவர்கள் பற்றியே கவனம் உள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு விடயத்தில் இந்தத் தலைவர்களின் நிலைப்பாடுகள் பற்றிப் பார்த்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 19ஆவது திருத்தத்தின் கீழ் மீண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்குப் போட்டியிட முடியாது. எனவே அவர் நிறைவேற்று அதிகார முறை ஒழிப்பதை வரவேற்கிறார்.

மறுபக்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடவில்லை.

இதனால் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து பாராளுமன்றத்துக்கு அதிக அதிகாரத்தை வழங்கி அதனூடாக செயற்படுவதற்கு முயற்சிக்கிறார்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக உறுதியளித்து பதவிக்கு வந்திருந்தார். எனினும் அவர் இரண்டாவது முறையும் ஜனாதிபதி பதவியில் இருப்பதற்கான நிலைப்பாட்டை மாற்றியிருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு அரசியல் தலைவர்கள் தமது தேவைகளுக்காக அரசியலமைப்பைத் தயாரிக்க முற்படக்கூடாது. அரசியலமைப்பு என்பது நாட்டு மக்களின் சமூக ஒப்பந்தத்தைக் கொண்ட புத்தகமாகும்.

அதேநேரம், நாட்டில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது. இவ்வாறு இரு அதிகார மையங்களுடன் நாட்டை தொடர்ந்து முன்கொண்டு செல்வது பொருத்தமானதாக இருக்காது. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குமாறு காலிமுகத்திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். அதே கூட்டத்தில் உரையாற்றிய ஐ.தே.கவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, அடுத்த தேர்தல் பற்றிக் கதைத்தபோதும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது பற்றிப் பேசவில்லை. இவ்வாறான முரண்பட்ட நிலைமைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 12/19/2018 - 09:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை