உச்ச மன்றிடம் வியாக்கியானம் கோருவதற்கே விரும்புகிறோம்

பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும

அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய எத்தனை அமைச்சர்கள் அரசாங்கத்தில் இடம்பெறலாம் என்பதை ஜனாதிபதியின் ஊடாக உச்ச நீதிமன்றத்திடம் கேட்கவிருப்பதாக சுற்றாடலுக்கான பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும தினகரனுக்குத் தெரிவித்தார்.

அரசியல் அமைப்பின் பிரகாரம் தனியொரு கட்சி அரசாங்கத்தில் இடம்பெறக்கூடிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30. ஆனால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்பதால் அமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆக அதிகரிக்க முடியுமா என்பது பற்றி உயர் நீதிமன்றத்திடம் கேட்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

அவ்வாறான மாற்றங்களை செய்யும் முன்னர் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கேட்பது நல்லது. ஏனெனில் 19 ஆவது திருத்தச் சட்டம் அமுலில் இருப்பதால் பல்வேறு தரப்பினர் இது தொடர்பாக வெவ்வேறு வியாக்கியானங்களை கூறுகின்றனர் என்று பிரதி அமைச்சர் மேலும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான புதிய அரசாங்கம் கூட்டு அரசாங்கம் என்ற வகையில் அமையுமா என்று கேட்கப்பட்ட போது, அது பற்றி நாம் தீர்மானிக்கலாம். ஏனெனில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு பல அரசியல் கட்சிகளின் ஆதரவு உள்ளது. தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்களும் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி பற்றி குறிப்பி்ட்ட பிரதி அமைச்சர், எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்வது அரசாங்கத்தின் வேலையல்ல. எதிர்க்கட்சிகளின் பெரும்பான்மையை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினருக்கு அரசாங்கத்துடன் எந்த தொடர்பும் இல்லை. அவ்வாறான ஒருவரே எதிர்க்கட்சித் தலைவராவார். எவ்வாறெனினும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்வதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் தனது செல்வாக்கை செலுத்தாது என்று அவர் மேலும் கூறினார்.

Fri, 12/28/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை