ஜனாதிபதி மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் 
 
வடக்கு, கிழக்குவாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது கொண்டிருந்த நம்பிக்கையில் எந்தவித குறைவும் ஏற்படவில்லையென்பது இரணைமடுவில் அவருக்கு வழங்கிய வரவேற்பின் மூலம் உறுதியாகியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை துரிதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி இரணைமடு குளத்தில் நீரைத் திறந்துவிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்தார். அங்குள்ள மக்கள் மிகவும் ஆவலுடன் ஜனாதிபதியை வரவேற்றிருந்தனர். ஜனாதிபதி மீதான நம்பிக்கையில் எந்தவிதமான குறைவும் ஏற்படவில்லை என்பது இதன் மூலம் உறுதியானது. குறிப்பாக அங்குள்ள விவசாயிகள் ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர் என்றார்.

ஜனாதிபதி சகல சமூகங்களுக்கும் பொதுவானவர் என்ற ரீதியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து அதிக அக்கறை காட்டியுள்ளார். குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்துள்ளார். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இவ்வருட இறுதிக்குள் பாதுகாப்புத் தரப்பினரிடமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி முப்படையினரக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதுவரை 97 வீதமான தனியார் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும். தனியார் காணிகள் மாத்திரமன்றி அரச காணிகளும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை துரிதப்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி இன்று (நேற்று) சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியிருந்தார். வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தபோதும், கடந்த மூன்றரை வருடத்தில் பல்வேறு அமைச்சரவைப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு குழப்பியடிக்கப்பட்டது. எந்த அமைச்சுக்குக் கொடுப்பது என்ற இழுபறியால் வீட்டுத்திட்டத்தை ஆரம்பிக்க முடியாது போனது என்றார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து விடுவிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது. இது போன்று தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வைப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மகேஸ்வரன் பிரசாத்

Tue, 12/11/2018 - 08:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை