இடைக்கால கணக்கறிக்கை சபையில் நிறைவேற்றம்

Rizwan Segu Mohideen
இடைக்கால கணக்கறிக்கை சபையில் நிறைவேற்றம்-Vote on Account Interim Budget Passed-Parliament-SL Mangala Samaraweera

2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான அரச செலவினங்களுக்காக ரூபா 1,765 பில்லியன் ஒதுக்கப்பட்டமை தொடர்பான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கணக்கறிக்கைக்கு ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக 06 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன கணக்கறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்ததோடு, மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராக வாக்களித்திருந்தது. வாக்களிப்பின் போது ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படாத நிலையில், 2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் செலவுகளை ஈடு செய்வதற்காக, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள் சமரவீரவினால் இன்றைய தினம் (21) பாராளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து அரசாங்கத்தின் செலவுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் (20) அமைச்சரவை பதவியேற்றதை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இடைக்கால கணக்கறிக்கையில் 55 வீதத்தை, அதாவது 970 பில்லியன் ரூபாவை கடன் தவணை மற்றும் வட்டி உள்ளிட்ட கடன் செலுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீண்டெழும் செலவிற்காக ரூபா 480 பில்லியனும், மூலதன செலவிற்காக ரூபா 310 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேற்படி இடைக்கால கணக்கறிக்கை மூலம் ஒக்டோபர் 26 இற்கு முன்னர் நிறுத்தப்பட்ட சகல வேலைத் திட்டங்களும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், நாடு முழுவதுமுள்ள 40 இலட்சம் மாணவர்களுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.

ஒக்டோபர் 26 ஆம் திகதி கூடிய மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவையினால் நிறுத்தப்பட்ட, தேசிய பொருளாதாரம் மற்றும் கிராமிய மேம்பாடு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அறிமுகப்படுததப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட “கம்பெரலிய” செயற் திட்டமும் ‘கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டம்’ என்ற வேலைத்திட்டமும் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில், 2019 ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கான சம்பளம், உர மானியம், பாடசாலைகளுக்கான சீருடை சமுர்த்தி நிவாரணம் ஆகிய நலன்புரி செயற்பாடுகள் நிறுத்தப்படும் நிலை ஏற்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 12/21/2018 - 16:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை