ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தலிபான் மறுப்பு

சவூதி அரேபியாவில் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஆப்கானிஸ்தான் அரசு விடுத்த அறிவிப்பை தலிபான்கள் நிராகரித்துள்ளனர்.  

ஆப்கானிஸ்தானில் கடுமையான இஸ்லாமிய சட்டத்தை கொண்டுவர அங்கு போராடி வரும் தலிபான்கள் அமைதி முயற்சியாக அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக அதன் தலைவர் ஒருவர் நேற்று குறிப்பிட்டார்.  

ஆப்கானின் 17 ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக தலிபான் பிரதிநிதிகள், அமெரிக்க பிரதிநிதிகளுடன் இம்மாதத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் சந்தித்தனர். எனினும் மேற்குலக ஆதரவு கொண்ட ஆப்கான் அரசுடன் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துவதை தலிபான்கள் நிராகரித்து வருகின்றனர்.  

“அபூ தாபியில் பூர்த்தி செய்யப்படாத பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு அமெரிக்க அதிகாரிகளை வரும் ஜனவரியில் நாம் சவூதி அரேபியாவில் சந்திப்போம்” என்று தலிபான்களின் தீர்மானம் நிறைவேற்றும் குழுவின் உறுப்பினர் ஒருவர் ரோய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டார். “நாம் ஆப்கான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்பதை அனைத்து நடுநிலையாளர்களிடமும் தெளிவாக கூறிக்கொள்கிறோம்” என்றும் அவர் கூறினார்.  

ஜனாதிபதி அஷ்ரப் கானியின் ஆப்கான் அரசு நாட்டின் 65 வீதமான மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் ஆப்கானின் 407 மாவட்டங்களில் 55.5 வீதமானது தற்போது தலிபான்கள் வசமே உள்ளது. நாட்டின் 70 வீதமான பகுதி தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.     

Mon, 12/31/2018 - 13:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை