அகிலவுக்கு பந்து வீச தடை - ஐசிசி

இலங்கை அணியின் வளர்ந்து வரும் இளம் பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவிற்கு பந்து வீச சர்வதேச கிரிக்கெட் சபை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை விதித்துள்ளது.

நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் அகிலவின் பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து 14 நாட்களுக்குள் அகில தனஞ்சய பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என அறிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த மாதம் நடுப்பகுதியில் பரிசோதனைகளுக்காக அகில அவுஸ்திரேலியா சென்றிருந்த நிலையிலேயே அதன் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இதன்படி அகில பந்து வீசும் போது 15 பாகைக்கு மேலாக கையை மடிப்பதாக பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்த தடை சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமல்லாது உள்ளூர் மட்ட போட்டிகளுக்கும் உள்ளடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ள போதிலும் சர்வதேச கிரிக்கெட் சபை விதிமுறைகளின் 11.5 ஆவது பகுதியின் படி இலங்கை கிரிக்கெட் சபையின் ஆதரவுடன் நடைபெறும் உள்ளூர் கழக மட்ட போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதியுடன் பந்து வீச முடியும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

அகில தனஞ்சய தனது பந்து வீச்சு முறைமையை ஒழுங்கு விதிக்கமைய மீள மாற்றியமைத்து மேன்முறையீடு மூலம் மீண்டும் பரிசோதனைக்கு உட்பட்டு பந்து வீச அனுமதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 12/12/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை