வெற்றியின் விளிம்பில் நியூஸிலாந்து

660 எனும் இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரையும் இழந்த நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று நிறைவு பெறும் தருணத்தில் இலங்கை அணி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 585 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தமது இன்னிங்ஸை நிறைவுக்கு கொண்டு வந்தது.

231 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து நேற்றைய (28) 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணி இலங்கை பந்து வீச்சாளர்களின் பந்துகளை மிக இலகுவாக எதிர்த்தாடியது. மீண்டுமொருமுறை சிறப்பாக ஆடிய டொம் லதம் 176 ஓட்டங்களைப்பெற்றார். மறுமுனையில் இறுதி வரை களத்திலிருந்த ஹென்றி நிகொல்ஸ் 162 ஓட்டங்களைப்பெற்று டெஸ்ட் போட்டிகளில் தனது தனிப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார். டொம் லதமின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து களம் கண்ட கொலின் டி க்ரேன்ட்ஹோம் டெஸ்ட் போட்டிகளில் தனது வேகமான அரைச்சத்த்தை பதிவு செய்ததுடன் இறுதி வரை களத்தில் இருந்து 71 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் சமீர மற்றும் தில்ருவன் பெரேரா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

நான்காவது இன்னிங்ஸுக்காக இந்த ஆடுகளத்தில் அதிகபட்சமாக 418 ஓட்டங்களே பெறப்பட்டுள்ள நிலையில் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளம் இன்னமும் சிறப்பான பெறுபேறுகளை வழங்குகின்றமையானது இலங்கை அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு எவ்விதமான அச்சுறுத்தலையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கொலின் டி க்ரேன்ட்ஹோம் 28 பந்துகளில் அரைச்சதம் கடந்தமை இதற்கு எடுத்துக்காட்டாகும்.

முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காது 264 ஓட்டங்களைப் பெற்ற டொம் லதம் இலங்கை பந்து வீச்சாளர்களை இப்போட்டியிலும் திணறடிக்க தவறவில்லை. இப்போட்டியில் 176 ஓட்டங்களைப் பெற்ற லதம் மொத்தமாக 370 பந்துகளை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இமாலய இலக்கினை எதிர்கொண்டுள்ள இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் இத்தொடர் முழுவதும் ஏமாற்றமளித்ததை போன்று இப்போட்டியிலும் ஏமாற்றமளித்தனர்.

தனுஷ்க குணதிலக 4 ஓட்டங்களுடனும் திமுத் கருணாரத்ன ஓட்டம் எதுவும் பெறாமலும் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தனுஷ்க குணதிலக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 4 இன்னிங்ஸ்களிலும் 1,3,8 மற்றும் 4 எனும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ளும் 4ஆவது டெஸ்ட் தொடர் வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வரலாற்றில் 3 தடவைகள் மாத்திரமே 4ஆவது இன்னிங்ஸில் 400க்கு மேற்பட்ட வெற்றி இலக்கு பெறப்பட்டுள்ள நிலையில் இறுதியாக 15 வருடங்களுக்கு முன்னர் மேற்கிந்தியத்தீவுகள் அணி பெற்ற 418 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. முதலாவது போட்டியை போலல்லாது இப்போட்டி மழையினால் பாதிக்கப்படாது என்று வானிலை அறிக்கை எதிர்வு கூறியுள்ள நிலையில் எஞ்சியிருக்கும் 2 நாட்களையும் முழுமையாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று போட்டியின் நான்காவது நாளாகும்.

நியூசிலாந்து

(முதலாவது இன்னிங்ஸ்)

178/10 (50)

டிம் சவ்தி 68(65)

பி ஜே வட்லிங் 46(90)

சுரங்க லக்மால் 5/54 (19)

லஹிரு குமார 3/49 (14)

தில்ருவன் பெரேரா 1/13 (5)

இலங்கை

(முதலாவது இன்னிங்ஸ்) 105/10 (41)

அஞ்சலோ மெத்திவ்ஸ் 33(88)*

ரொஷேன் சில்வா 21(63)

ட்ரெண்ட் போல்ட் 6/30 (15)

டிம் சவ்தி 3/35 (15)

க்ரேன்ட்ஹோம் 1/19 (6)

நியூசிலாந்து

(இரண்டாவது இன்னிங்ஸ்)

585/4 d (153)

டொம் லதம் 176(370)

ஹென்றி நிக்கோல்ஸ் 162(225)

ஜீட் ராவல் 74(162)

கொலின் டி க்ரேன்ட்ஹோம் 71(45)

லஹிரு குமார 2/134 (32)

துஷ்மந்த சமீர 1/147 (30)

தில்ருவன் பெரேரா 1/149 (41)

இலங்கை

(இரண்டாவது இன்னிங்ஸ்) 24/2

சந்திமால் 14(42)

குசல் மெண்டிஸ் 6(33)

அஸாப் மொஹம்மட்

Sat, 12/29/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை