மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் திங்கட்கிழமை

RSM
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் திங்கட்கிழமை-Mannar Human Skeleton-116th Day

- புதன்கிழமை 116 வது நாளில் இடைநிறுத்தப்பட்டது

மன்னார் நகரில் அகழ்வு செய்யப்பட்டுவரும் மனித புதைகுழியின் அகழ்வுப் பணியானது கடந்த புதன்கிழமையுடன் (12) இடைநிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் வழமைபோன்று திங்கள் கிழமை (17) ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மன்னார் நகரிலுள்ள சதொச விற்பனை நிலைய கட்டுமானப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை (12) வரை 116 தினங்களாக அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் திங்கட்கிழமை-Mannar Human Skeleton-116th Day

இவ் அகழ்வுப் பணி வழமையாக திங்கள் தொடக்கம் வெள்ளிக்கிழமை நண்பகல் வரை நடைபெற்று வருகின்றபோதும்  இவ் அகழ்வுப் பணிக்கு தலைமை வகித்து வரும் சட்டவைத்திய நிபுணர் கடமை நிமித்தம் கொழும்பு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இப்பணி கடந்த நேற்று முன்தினம் (12) இடைநிறுத்தப்பட்டு மீண்டும் திங்கள் கிழமை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இவ்வகழ்வுப் பணியில் 21 சிறுவர்களுடைய எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 276 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றில் 269 என்புக்கூடுகள் குழிக்குள் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில் சட்டவைத்திய நிபுணர் சமிந்த ராஐபக்ச தலைமையிலான குழுவினரால் இவ்வகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் தடயப்பொருட்கள் யாவும் பாதுகாப்புக்கருதி மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(தலைமன்னார் நிருபர் - வாஸ் கூஞ்ஞ)

Fri, 12/14/2018 - 10:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை