தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை

ட்டன் போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 19 குடும்பங்களை சேர்ந்த 108 பேர் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர். தற்போது இவர்கள் போடைஸ் தோட்ட வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைப் பார்வையிடுவதற்காக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் இன்று(30) போடைஸ் தோட்டத்துக்கு விஜயம் செய்தார்.

இவருடன் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம், அம்பகமுவ பிரதேச செயலாளர் ஜீ.சுமனசேகர, தோட்ட அதிகாரி,  பிரதேச முக்கியஸ்தர்களும் சென்றிருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் பாடசாலை சீருடை மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கினார்.

இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் கூறியதாவது,

மாணவர்களின் பாடபுத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளது. இதனால் இவர்களுக்கான பாடப்புத்தகங்கள் கல்வி அமைச்சின் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு, தேசிய அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சில தீக்கிரையாகியிருப்பதனால் கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக நடமாடும் சேவையின் மூலம் இதனை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, அமைச்சு பதவி தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

எங்களுக்கு பொருத்தமான அமைச்சு ஒன்று கிடைக்கும் பட்சத்தில் அதனை நான் ஏற்றுக்கொள்வேன். மலையக மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் அமைச்சு பதவி ஒன்று கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களின் எதிர்பார்ப்பு என்றார்.

ஹட்டன் சுழற்சி நிருபர்    

 

Sun, 12/30/2018 - 15:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை