மஹேல – சங்கக்காரவின் பெயரில் நாலந்த – திருத்துவ கல்லூரிகளின் கிரிக்கெட் சமர்

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட்டில் முன்னணி பாடசாலைகளாக வலம்வந்து கொண்டிருக்கின்ற கொழும்பு நாலந்த கல்லூரி மற்றும் கண்டி திருத்துவக் கல்லூரிகளின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையில் வருடாந்தம் நடத்தப்படுகின்ற கிரிக்கெட் தொடரை அவ்விரண்டு கல்லூரிகளின் சார்பாக தேசிய அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்த முன்னாள் நட்சத்திர வீரர்களாக மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்காரவின் பெயரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் உலகில் இலங்கைக்கு பல வெற்றிகளையும், கௌரவங்களையும் பெற்றுக் கொடுத்த மஹேல மற்றும் சங்கக்கார ஆகிய இருவரும் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர்களின் முன்மாதிரியை எதிர்கால சந்ததியினருக்காக வழங்கும் நோக்கில் இந்த கிண்ணத்தை Sprit of Cricket legacy for future Genaration என்ற தொனிப்பொருடன் மஹேல – சங்கா சவால் கிண்ணம் என பெயரிடுவதற்கு ஏற்பாட்டுக் குழுவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

நாலந்த கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஆகியவற்றின் பங்களிப்புடன் நாலந்த கல்லூரியின் 88 குழு பழைய மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள மஹேல மற்றும் சங்கா சவால் கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 27ஆம், 28ஆம் திகதிகளில் நாலந்த கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நாலாந்த கல்லூரிக்கும், திருத்துவக் கல்லூரிக்கும் இடையில் கடந்த 40 வருடங்களாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், இவ்வருடம் நடைபெறவுள்ள 41ஆவது கிரிக்கெட் தொடர் மஹேல – சங்கா சவால் கிண்ணத்துக்காக நடைபெறவுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற ரி-20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சம்பியனாகியதைக் கொண்டாடியதைப் பிரதிபலிக்கும் மஹேல மற்றும் சங்காவின் உருவங்கள் பொறிக்கப்பட்ட அழகான இந்தக் கிண்ணம், கடந்த வியாழக்கிழமை எஸ்.எஸ்.சி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மஹேல மற்றும் சங்கக்காரவின் கரங்களினால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன கருத்து வெளியிடுகையில், நான் 1983இல் நாலந்த கல்லூரியில் இணைந்த போது இவ்வாறானதொரு போட்டித் தொடருக்கான எனது பெயர் பொறிக்கப்பட்டு அதனை நான் திரைநீக்கம் செய்துவைப்பேன் என ஒருபோதும் கனவு கண்டதில்லை. இந்த கிரிக்கெட் போட்டியானது எனக்காகவும், சங்கக்காரவுக்கும் விளையாடப்படுகின்ற போட்டித் தொடரல்ல. எதிர்கால கிரிக்கெட் சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்படும் போட்டியாகும். இது எமது பாடசாலைகளுக்கு மாத்திரமல்லாமல் திறமையான வீரர்களை உருவாக்குகின்ற முக்கிய போட்டியாகவும் அமையவுள்ளது. எனவே இதற்காக என்னுடைய பெயரையும், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் நெருங்கிப் பழகிய, சகபாடியான சங்கக்காரவின் பெயரை வைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

அத்துடன், இலங்கையின் பாடசாலைகள் கிரிக்கெட் மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக நான் எப்பொழுதும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளேன். திறமையான வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இலங்கை கிரிக்கெட் முன்னுக்குச் செல்ல வேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.

இதேநேரம், ஒரு கிரிக்கெட் வீரரின் தகுதியை மதிப்பிடுவதற்கு அவர் பெற்றுக்கொண்ட ஓட்டங்களோ அல்லது கைப்பற்றிய விக்கெட்டுக்களோ முக்கியமாக கருதப்படுவதில்லை எனவும், ஒழுக்கம், பொறுமை என்பன மாத்திரமே ஒரு கிரிக்கெட் வீரரிடம் இருக்க வேண்டியப முக்கிய பண்பு என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்தார்.

இது எமது வாழ்க்கையில் முக்கிய தருணமாகும். கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு எமது பெயர்களை மறந்துவிடுவார்கள். ஆனால், எமது பெயர்களை இந்த கிண்ணத்திற்காக பொறிக்கப்பட்டமை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். நாங்கள் இருவரும் ஏககாலத்தில் கிரிக்கெட் விளையாடினோம்.அதன்மூலம் தான் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக உருவெடுத்து தேசிய அணியிலும் ஒன்றாக விளையாடினோம். நாங்கள் இன்று இந்தளவு உச்சத்துக்கு செல்வதற்கு எமது பாடசாலைகள் பெரும் பங்காற்றின. பாடசாலை கிரிக்கெட் பல்வேறு விடயங்களை எமக்கு கற்றுக்கொடுத்தன. கடும் உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கின்ற இந்த விளையாட்டானது பல்வேறு இனங்கள், மதங்களைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றது. இந்த நல்லிணக்கம் பாடசாலை கிரிக்கெட்டில் மாத்திரம் தான் தற்போது இருக்கின்றது என குமார் சங்கக்கார தெரிவித்தார்.

பீ.எப் மொஹமட் 

Tue, 12/25/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை