பிரதமர், அமைச்சரவைக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு

மேலதிக விசாரணை ஜனவரி 16, 17, 18

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது அமைச்சரவைக்கும் விதிக்கப்பட்டுள்ள இடைக் காலத் தடையுத்தரவை நீக்கமுடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (14) அறிவித்தது.தடையுத்தரவை நீக்கக்கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் முற்றாக நிராகரித்ததோடு மஹிந்த ராஜபக்ஷ தரப்பால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 16, 17, 18 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த மனு, மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு முடிவுறும் வரையில் இதனோடு தொடர்புபட்ட மேன்முறையீட்டு நீதிமன்றிலுள்ள றிட்மனு மீதான விசாரணையையும் இடைநிறுத்தும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணைகளை ஐந்து நீதிபதிகள் முன்னிலையில் விசாரிப்பது குறித்து பிரதம நீதியரசர் கவனம் செலுத்துவாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வணசுந்தர (தலைவர்), புவனெக்க அலுவிஹார, விஜித் மலல்கொட ஆகிய நீதிபதிகள் முன்னி லையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே இந்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.இடைக் காலத் தடையை நீக்குமாறு கோரிய மனுவை நீதியரசர்கள் குழு ஒருமித்ததாக நிராகரித்ததுடன், நீதியரசர் விஜித் மலல்கொட

மாத்திரம் மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்கு எதிர்ப்பை தெரிவித்தார். இந்த மேன்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்திருக்க வேண்டுமென் பதே தனது நிலைப்பாடு என நீதியரசர் மலல்கொட தெரிவித்தார் .

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையி லான அமைச்சரவை உறுப்பினர்கள் விசேட மேன்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தி ற்கு சமர்ப்பித்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தால் வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை நீக்குமாறு கோரியிருந்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்றுக் காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது.மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடையுத்தரவு காரணமாக நாட்டில் பிரதம அமைச்சரோ அமைச்சரவையோ இல்லாத ஒரு நிலை தோன்றியுள்ளது. அதன் காரணமாக அமைச்சரவையொன்றை நியமிப்பதற்கு வாய்ப்பும் இல்லாத நிலை உருவாகியிருப்பதா கவும் தெரிவித்து விசேட மேன்முறையீட்டு மனு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா கருத்துக்களைத் தெரிவித்தார். திருத்தப்படாத ஹன்சார்ட் அறிக்கையை வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தடையுத்தரவை விதித்திருப்பதாகவும் இவ் வழக்கு, தீர்ப்பொன்றுக்கு வராததால் தனது மனுதாரர்கள் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் அது முழு நாட்டையும் பாதிக்கக்கூடிய ஒரு செயலெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அமைச்சரவையை நியமிக்கவும், இருப்ப வர்கள் அந்தப் பதவியில் செயற்படுவதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்ற இடைக்காலத் தடை இடமளிக்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.இதேவேளை பாராளுமன்றத்தில் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பாராளுமன்றத்தின் 122 உறுப்பினர்கள் பெற்றுக்கொடுத்துள்ள சத்தியக்கடதாசியில் தெரிவிக்கப் பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் இவ்விடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தப்படாத ஹன்சார்ட் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென முறைப் பாட்டா ளர்கள் தரப்பில் வாதமொன்று முன்வைக்கப் பட்ட போதும் சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் 57ஆவது பிரிவிற்கமைய பாராளுமன்றத்தின் எந்தவொரு ஆவணத்தையும் சாட்சியாக ஏற்றுக்கொள்ள முடியுமெனவும் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 122 பேரின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தின் 18 ஆவது பிரிவிற்கமைய அரச அச்சகர் உறுதிப் படுத்தி வெளியிட்ட எந்தவொரு பாராளுமன்ற குறிப்புகளையும் சாட்சியமாக நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள முடியுமென ஜனாதிபதி சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ இங்கு எடுத்துரைத்தார்.

அத்துடன், நிலையியற் கட்டளைகளின் படி 42(1) பாராளுமன்றத்தில் ஒரு தடவை மட்டுமே குரல் மூலம் வாக்கெடுப்பை பயன்படுத்த முடியு மெனவும் இந்த மேன்முறையீட்டு மனு பாராளுமன்றத்திற்கு முக்கியமான விடயமாக விருப்பதால் இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு அதிகாரமில்லை யென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இரு தரப்பினரின் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதன் பின்னர் மனுதாரர் தரப்பினால் மீண்டும் எதிர்ப்புத் தெரி விக்கப்பட்டது.

இந்தநிலையில் 10 நிமிடங்களுக் கு நீதிமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தி பின்னர் நீதியரசர்கள் குழாம் தமது முடிவை அறிவித்தது.விசேட மேன்முறையீட்டு மனுமீதான விசாரணைகள் நேற்று நடைபெற்ற வேளையில் நீதிபதிகள் குழாமின் தலைவர் ஈவா வணசுந்தர, தனது 39 வருட அரச சேவையிலிருந்து இன்று (நேற்று14) முதல் ஓய்வுபெறுவதாகத் தெரிவித்ததோடு இந்த அரச சேவையில் தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாருக்கும் முகம் பார்த்து தீர்ப்புகளையோ, முடிவுகளையோஎடுக்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஈவா வணசுந்தரவின் சேவைகளை கௌரவப்படுத்தும் வகையில் நீதியரசர்கள் குழாமும் சட்டத் தரணிகளும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

 

Sat, 12/15/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை