எகிப்து முன்னாள் ஜனாதிபதிகள் முர்சி, முபாரக் நீதிமன்றில் ஆஜர்

எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அவருக்கு அடுத்து ஜனாதிபதியான மொஹமது முர்சியின் சிறை உடைப்பு குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிக்க கெய்ரோ நிதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை ஆஜரானார். இதனால் அந்த நீதிமன்ற அறையில் இரு முன்னாள் எகிப்து ஜனாதிபதிகளும் தோன்றினர்.

2011 ஆம் ஆண்டு மக்கள் ஆர்ப்பட்டத்தின் மூலம் 30 ஆண்டு ஆட்சியில் இருந்து வீழ்த்தப்பட்ட 90 வயதான முபாரக் தடியொன்றின் உதவியோடு நீதிமன்ற அறைக்கு வந்தார்.

எகிப்தில் முதலாவது ஜனநாயக முறையில் தேர்வான முர்சிக்கு எதிரான அவரது வாக்குமூலத்தில் பல கேள்விகளுக்கும் தம்மால் பதிலளிக்க முடியாது என்று குறிப்பிட்டதோடு, இராணுவம் மற்றும் தற்போதைய ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல் சிசியின் அனுமதியை பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இம்மாத ஆரம்பத்தில் இந்த வழக்கு தொடர்பில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறி இருந்தார். அவர் நீதிமன்றத்தில் தோன்ற இராணுவத்தின் அனுமதி கிடைக்கவில்லை என்று அவரின் வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார்.

சிசியினால் இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் முர்சி பல்வேறு வழக்கு விசாரணைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 12/28/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை