விசேட தெரிவுக்குழு நியமிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு கிடையாது

ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் எம்.பி பதவியை இரத்து செய்வதற்காக விசேட தெரிவுக்குழு நியமிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு கிடையாது என ஐ. ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார்.

வேறு கட்சியிலோ கூட்டணியிலோ இணைவதால் சு.க உரிப்புரிமை இரத்தாகாது என்று கூறிய அவர், பொதுஜன பெரமுனவில் மஹிந்த ராஜபக்ஷ இணைந்ததற்கான சாட்சியம் எதுவும் கிடையாது எனவும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பில் நேற்று நடைபெற்ற சர்ச்சையின் போது கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

எம்.பி பதவி இழக்கும் 3 சந்தர்ப்பம்

தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகைமை இழப்பு தொடர்பில் 66 சரத்தில் கூறப்பட்டுள்ளது. 91 (ஈ) சரத்துடன் தொடர்புபட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜித சேனாரத்னவுக்கு எதிராக டிலான் பெரேரா தாக்கல் செய்த வழக்கில் ராஜித சேனாரத்ன எம்.பி பதவியை இழந்தார். 99 (13) சரத்தில் விலகல், பதவி நீக்கம், சமுகமளிக்காதிருத்தல் ஆகிய சந்தர்ப்பத்தில் ஒருமாத காலத்தில் எம்.பி பதவியை ஒருவர் இழக்கிறார்.மஹிந்த ராஜபக்‌ஷ ஐ.ம.சு.முவில் இருந்தோ சு.க.வில் இருந்தே விலகவில்லை. விலக்கப்படவுமில்லை. இவ்வாறு கட்சி செயலாளர் சபாநாயகருக்கு அறிவிக்கவில்லை. தெரிவுக்குழு அமைத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் எம்.பி பதவியை நீக்கலாம்.

மக்கள், எம்.பிக்கு வழங்க முன்னர் கட்சிக்கே வாக்களிக்கின்றனர். இக் கட்சியினால் அறிவிக்காமல் ஒருவரின் எம்.பி பதவி இரத்தாகாது.

தெரிவுக்குழு அமைக்குமாறு சிலர் கோரியுள்ளனர்.161 சரத்தில் இடைக்கால ஏற்பாடுகளின் பிரகாரம் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. சு.கவிலிருந்து 4 எம்.பிகள் விலகிய போது லலித் அதுலத் முதலியின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. தேசிய அரச பேரவை பாராளுமன்றமாக மாற்றப்பட்ட நிலையிலே இந்த விசேட தெரிவுக்குழு அன்றிருந்த சபாநாயகரால் நியமிக்கப்பட்டது. ஆனால் இடைக்கால ஏற்பாட்டின் கீழ் விசேட தெரிவுக் குழு அமைக்கும் அதிகாரம் தற்போதைய அரசியலமைப்பினூடாக வழங்கப்படவில்லை. நிலையியற்கட்டளைகளிலும் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு கட்சியிலோ கூட்டணியிலோ இணைவதால் சு.க உறுப்புரிமை இரத்தாகாது.கட்சியினால் ஒழுக்காற்று விசாரணை நடத்தி கட்சியிலிருந்து நீக்கியதாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்தால் மாத்திரமே எம்.பி பதவி இரத்தாகும்.

ஐ.ம.சு.மு குழுவின் முடிவின் பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பிலோ நிலையியற் கட்டளையிலோ எதிர்க்கட்சித் தலைவர் பற்றி கூறப்படவில்லை. இது தொடர்பில் நீதிமன்றம் செல்லவும் முடியாது.

பொது ஜன பெரமுனவில் மஹிந்த ராஜபக்‌ஷ இணைந்ததாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டாலும் அதற்கான சாட்சி கிடையாது என்றார்.

 

Thu, 12/20/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை