நீதிமன்ற வளாகத்தில் ​ேநற்று பலத்த பாதுகாப்பு

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பு வழங்கப்படுவதையிட்டு நேற்று (13) உச்ச நீதிமன்ற சுற்றுவட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.நேற்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிரு ந்த நிலையில் உச்ச நீதிமன்ற தொகுதியில் பாரிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினரும், கலகம் அடக்கும் குழுவினரும் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் பொலிஸ் மோப்ப நாய்கள் படையணியும் ஆங்காங்கே கடமையிலீடுபடுத்தப்பட்டிருந்தன. நீதிமன்ற வளாகத்துள் ஊடகங்களைத்தவிர வெளியாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு

நாடு முழுவதும் பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. மாலை 4 மணியளவில் அறிவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தபோதும் சுமார் ஒரு மணித்தியாலம் தாமதமாகவே அறிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் 502ஆவது அறையில் அரசியல்வாதிகளும் முக்கியப் பிரமுகர்களும் நேர காலத்துடனேயே வந்து அமர்ந்திருந்தனர். இதனால் தீர்ப்பு வழங்கப்படும் அறை சனக்கூட்டத்தில் நிரம்பிக் காணப்பட்டது.

மாலை 4 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்படுமென முன்கூட்டியே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் சுமார் 45 நிமிடங்களுக்குப் பின்னரே ஏழு நீதிபதிகளும் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தனர்.

தீர்ப்பை எதிர்பார்த்து நேற்று பெரும் திரளான பொதுமக்கள் உச்ச நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர். எனினும் பாதுகாப்பின் நிமித்தம் அனைவரையும் உச்ச நீதமன்றத்துக்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. தேசிய அடையாள அட்டையை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற வளாகத்தில் நாட்டிலுள்ள அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் பிரதிநிதிகள் குழுமியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. தீர்ப்பு மற்றும் அது தொடர்பிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை நேரலை வழியாக மக்களுக்கு வழங்குவதற்காக அவர்கள் தமது பணிகளை முன்னெடுத்த வண்ணமிருந்தனர்.

தீர்ப்பை முன்னிட்டு நேற்று காலை முதல் உச்ச நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், கலகத் தடுப்பு பொலிஸார் ஆகியோர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை முக்கிய அரசாங்க நிறுவனங்களிலும், லேக்ஹவுஸ் நிறுவனம் உள்ளிட்ட அரச சார்பு ஊடக நிறுவனங்களிலும் நேற்றையதினம் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. லேக்ஹவுஸ் நிறுவனத்துக்குள் அத்துமீறி நுழைந்து சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தபோதிலும் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொழிற்சங்கங்கள் நீதிமன்ற தீர்ப்பையடுத்து பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சி ஆரவாரத்தையும் வெளிப்படுத்தின. எனினும் உடமைகளுக்கும் மக்களுக்கும் சேதமின்றிய வகையில் வெற்றிக் களிப்பை கொண்டாடுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

Fri, 12/14/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை