நிபந்தனைகள் எதுவும் இல்லை

எதிர்க்கட்சியிலிருந்து ரணிலுக்கு ஆதரவு
இணக்கப்பாட்டிலேயே வாக்களிப்பு

அரசாங்கத்தின் அங்கத்தவராக இணைந்து கொள்ளாது எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலே ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித் ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக செயற்படுவதற்கு பாராளுமன்றத்தில் அதிக நம்பிக்கை உள்ளது என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் எம்பி இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டத்துக்கு முரணானவை என்ற நிலைப்பாட்டை நாம் ஆரம்பத்திலிருந்து கொண்டிருக்கின்றோம். நாட்டிலே அரசாங்கம் ஒன்று இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பில் நாம் ஏற்கனவே ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தோம். அதில் ஐக்கிய தேசிய முன்னணியின் தெரிவு யாரோ அவரை பிரதமராக ஆதரவளிப்போம் என்பதைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தோம். தற்பொழுது ஐக்கிய தேசிய முன்னணி தங்களுடைய தெரிவு ரணில் விக்கிரமசிங்க என அறிவித்திருந்தது. அதன் பிரகாரம் இன்று நாட்டில் உடனடியாக ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். அது பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பவரின் தலைமையில் அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஆதரவாக வாக்களித்திருக்கின்றோம்.

எங்களுடைய விளக்கத்திலே மிகத் தெளிவாக அரசாங்கத்தின் அங்கத்தவராக சேர மாட்டோம் என்பதையும், தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே இருந்துவருவோம் என்பதையும் விளக்கிச் சொல்லியிருக்கிறோம்.

எந்தவொரு முன் நிபந்தனையையும் நாம் முன்வைக்கவில்லை. நாட்டின் ஸ்திரத்தன்மையை யோசித்தே இந்த முடிவை எடுத்தோம். இருந்தபோதும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சகல தரப்பினரிடமும் கலந்துரை யாடி ருந்தோம். ஐக்கிய தேசிய முன்னணியிடமும் இது பற்றிக் கலந்துரையாடினோம். இன்று ரணில் விக்கிரமசிங்கவின் உரையில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதகாவும், பிரிக்கப்படாது பிளவுபடுத்த முடியாத நாட்டுக்குள் அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதாகவும் தெளிவாகக் கூறியிருந்தார். ஜனாதிபதியைச் சந்தித்து எமது நிலைப்பாட்டை அவருக்குத் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை "ஹன்சாட்டில்" இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்ததுடன், அக்கடிதத்தில் தாம் எதிர்த்தரப்பிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவோம் என்ற விடயத்தை தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதாகவும் கூறினார்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

Thu, 12/13/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை