ஜாவா லேன் முதல் வெற்றி; டிபெண்டர்ஸ், கொழும்பு அணிகளுக்கு இலகு வெற்றி

டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் 8ஆவது வாரத்திற்கான ஆறு போட்டிகள் கடந்த வார இறுதியில் நடைபெற்றன. இதில் நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்துக் கழகம், டிபெண்டர்ஸ் அணிகள் இலகு வெற்றியை சுவைத்ததோடு ஜாவா லேன் தொடரில் முதல் வெற்றியை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஜாவா லேன் வி.க. எதிர் சுப்பர் சன் வி.க.

இரண்டாவது பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாவா லேன் 3-–1 என்ற கோல் கணக்கில் சுப்பர் சன் அணியை வீழ்த்தி இம்முறை டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

சிட்டி கால்பந்து வளாகத்தில் 8 ஆவது வாரத்திற்காக ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற போட்டியில் இதுவரை ஒரு வெற்றியும் இன்றி புள்ளிப் பட்டியலில் கடைசி இடமான 18 ஆவது இடத்தில் இருக்கும் ஜாவா லேன் அணி முதல் பாதியில் பின்னடைவை சந்தித்தது.

சுப்பர் சன் பெனால்டி மூலம் கோல் ஒன்றை பெற்று முன்னிலை அடைந்தது. பெனால்டி எல்லைக்குள் பந்தை தலையால் முட்டி கோல் அடிக்க முயன்ற பசான் முறையற்ற விதத்தில் தடுக்கப்பட்டதை அடுத்து சுப்பர் சன் அணிக்கு கிடைத்த பெனால்டி கிக் மூலம் அபிஸ் ஒலயிமி கோல் பெற்றார்.

முதல் பாதியில் தடுமாற்றம் கண்ட ஜாவா லேன் இரண்டாவது பாதியில் முற்றிலும் வேறுபட்ட அணியாக களமிறங்கியது. இரண்டாவது பாதியின் இரண்டாவது நிமிடத்திலேயே மொஹமட் அப்துல்லாஹ்வின் கச்சிதமான கோணர் உதையை உயரப்பாய்ந்து தலையால் தட்டிவிட்ட மாலக பெரேரா ஜவா லேன் அணிக்கு முதல் கோலை பெற்றுக் கொடுத்தார். மீண்டும் செயற்பட்ட பெரேரா 88 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை பெற்றார்.

அதேபோன்று, 72ஆவது நிமிடத்தில் மொஹமட் அலீம் பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்த எதிரணி கோல் காப்பாளரை முறியடித்து பந்தை வலைக்குள் செலுத்தி ஜாவா லேன் அணிக்கு உறுதியான வெற்றி ஒன்றை பெற்றுக் கொடுத்தார்.

டிபெண்டர்ஸ் கா.க.எதிர் சோண்டர்ஸ் வி.க.

சுகததாச அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற எட்டாவது வாரத்திற்கான போட்டியில் செளண்டர்ஸ் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி டிபெண்டர்ஸ் அணி மீட்சி பெற்றது.

வார நடுப்பகுதியில் நடைபெற்ற போட்டியில் ரெட் ஸ்டார்ஸ் அணியிடம் 0-–5 என அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த டிபெண்டர்ஸ் 18 ஆவது நிமிடத்திலேயே கசுன் பிரதீப் மூலம் முதல் கோலை பெற்றது. மதுஷான் டி சில்வா பந்தை பெனால்டி பெட்டிக்குள் செலுத்த ஓப் சைட் பொறியில் இருந்து தப்பிக்கொண்ட பிரதீப் பந்தை வலைக்குள் செலுத்தினார்.

இரண்டாவது பாதியில் சௌண்டர்ஸ் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த டிபெண்டர்ஸ் தடுமாற்றம் கண்டபோதும் 52 ஆவது நிமிடத்தில் எதிரணி பின்கள வீரர்களை முறியடித்து எரங்க பிரியசான்த கோல் பெற அந்த அணி 2-–0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில் போட்டியின் கடைசி நேரத்தில் சௌண்டர்ஸ் வீரர்கள் எதிரணி கோல்கம்பத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்க அந்த இடைவெளியை பயன்படுத்தி கசுன் பிரதீப் இரண்டாவது கோலை புகுத்தினார்.

போட்டி முடியும் நேரத்தில் டிபெண்டர்ஸ் விரர் மொஹமட் இஸ்ஸடீன் மற்றும் சௌண்டர்ஸின் சானுக்க எரங்க கைகலப்பில் ஈடுபட இருவரும் சிவப்பு அட்டை பெற்றனர்.

ரட்ணம் வி.க. எதிர் கொழும்பு கா.க.

மொமாஸ் யப்போவின் ஹட்ரிக் கோல் மூலம் ரட்ணம் அணியை 4-–0 என்ற கோல் வித்தியாசத்தில் கொழும்பு கால்பந்து கழகம் வெற்றி பெற்றது.

கொழும்பு கால்பந்து கழகம் மற்றொரு கோலை போட முயற்சிக்க ரட்ணம் பதில் கோல் திருப்ப போராடியது. எனினும், சிறப்பாக ஆடி வந்த சர்வான் ஜோஹர் கோல் கம்பத்தின் இடது மூலையில் இருந்து பந்தை வலைக்குள் செலுத்தி கொழும்பு அணிக்கு இரண்டாவது கொலை பெற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில் 72 ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் சச்சின்த மதுரங்க சிவப்பு அட்டை பெற்று சென்றது ரட்ணம் அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.

எனினும், தொடர்ந்து அதிரடியாக ஆடிய யப்போ கடைசி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை பெற்று கொழும்பு அணிக்கு இமாலய வெற்றி ஒன்றை பெற்றுக் கொடுத்தார்

மாத்தறை சிட்டி வி.க. எதிர் அப் கண்ட்ரி லயன்ஸ்

மாத்தறை கால்பந்து வளாகத்தில் நடைபெற்ற போட்டியில் மாத்தறை சிட்டி அணி 3–-1 என்ற கோல் வித்தியாசத்தில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணியை இலகுவாக வென்றது.

போட்டியை ஆரம்பித்த டி. ஒபோரி மூலம் 13 ஆவது நிமிடத்தில் அப் கண்ட்ரி லயன்ஸ் முன்னிலை பெற்றபோதும் 24 ஆவது நிமிடத்தில் எல். பிரின்ஸ் பெற்ற கோல் மூலம் மாத்தறை சிட்டி பதில் கோல் திருப்பியது. இதனால் முதல்பாதி ஆட்டம் 1-–1 என சமநிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய மாத்தறை சிட்டி சார்பில் 62ஆவது நிமிடத்தில் ஆர். வீரப்புலி மற்றும் 88ஆவது நிமிடத்தில் சீ. வீரப்புலி கோல் பெற்றனர்.

பெலிகன்ஸ் வி.க. எதிர் நீர்கொழும்பு யூத் கா.க.

குருநாகல், மலியதேவ மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற போட்டியில் பெலிகன்ஸ் மற்றும் நீர்கொழும்பு யூத் அணிகள் தலா ஒரு கோல் புகுத்த போட்டி சமநிலையில் முடிவுற்றது.

முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற்ற நிலையில் கமால் சில்வா 53ஆவது நிமிடத்தில் கோல் பெற்று நீர்கொழும்பு யூத் அணியை முன்னிலை பெறச் செய்தபோதும் பெலிகன்ஸ் அணிக்காக 79 ஆவது நிமிடத்தில் கோட்பிரேட் பதில் கோல் திருப்பினார்.

ரினௌன் வி.க. எதிர் ரெட் ஸ்டார்ஸ் கா.க.

களனி கால்பந்து வளாகத்தில் சனிக்கிழமை (22) நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் கடைசிவரை கோல் பெற தவறிய நிலையில் ரினௌன் மற்றும் ரெட் ஸ்டார் அணிகளுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.

டிபெண்டர்ஸ் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 5-–0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோதும் ரெட் ஸ்டார் அணியின் கோல் முயற்சிகள் தவறிப்போயின.

கொழும்பு, சிட்டி கால்பந்து வளாகத்தில் 8 ஆவது வாரத்திற்காக சனிக்கிழமை (22) நடைபெற்ற போட்டியில் நடப்புச் சம்பியனான கொழும்பு அணியினர் பந்தை அதிக நேரம் தம் சவம் வைத்திருந்தபோதும் ஆரம்பத்தில் கோல் பெற தவறியது.

எனினும், முதல்பாதியின் மேலதிக நேரத்தில் வைத்து டிமிட்ரி கோல் கம்பத்தின் இடது பக்கம் இருந்து உதைத்த ப்ரீ கிக்கை யப்போ தலையால் முட்டி இலகுவாக கோலாக மாற்றினார்.

Thu, 12/27/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை