பாராளுமன்றத்தில் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியோருக்கு எதிராக நடவடிக்ைக

இழப்பீடுகளை அவர்களிடமே அறவிடவும் எதிர்பார்ப்பு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி

பாராளுமன்றத்தில் சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளை அவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களால் பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் குறித்த பிரதான மதிப்பீட்டாளரின் அறிக்கைக்காக பொலிஸார் காத்திருப்பதுடன், அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒலிக் கட்டமைப்புக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் குறித்து தனியார் நிறுவனம் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருப்பதுடன், ஏனைய சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்பீடுகள் குறித்து பிரதான மதிப்பீட்டாளருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி சபாநாயகர் தெரிவித்தார். சபையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக பிரதி சபாநாயகர் தலைமையிலான குழுவொன்றை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்திருந்தார்.

இந்தக் குழு எதிர்வரும் வியாழக்கிழமை பொலிஸ் திணைக்கள அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்த விடயங்கள் வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் சந்திப்பில் கேட்டறியப்படும் என்றும், இது தொடர்பில் முன்னேற்றம் தொடர்பான வாராந்த கூட்டத்தைக் கூட்டவிருப்பதாகவும் தெரிவித்தார். தனியார் ஊடக நிறுவனத்திடமிருந்து ஔிப்பதிவுகளைப் பெற்று அவற்றின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவிருப்பதாகவும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கு கடந்த 29ஆம் திகதி ஆறு பேர் கொண்ட குழுவொன்றை சபாநாயகர் நியமித்திருந்தார். பிரதி சபாநாயகரை தலைமையாகக் கொண்ட இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்‌ஷ, பிமல் ரத்னாயக்க, மாவை சேனாதிராஜா, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சந்திரசிறி கஜதீர ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

"அன்றையதினம் பதிவான சி.சி.ரி.வி கமராக்களின் ஒளிப்பதிவுகளை நாம் பார்வையிட்டுள்ளோம். அதனை அடிப்படையாகக் கொண்டு சபைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதுடன், அதில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். எமது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் சபாநாயகர் உறுதியாகவிருக்கின்றார். விசாரணைகள் ஏன் இன்னமும் காலமாதமப்படுகின்றன என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

டிஸ்னா முதலிகே

Tue, 12/25/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை