இனவாதத்தால் ஒருபோதும் நாட்டை ஒன்றுபடுத்த முடியாது

இனவாதத்தால் நாட்டை ஒருபோதும் ஒன்றுபடுத்த முடியாது. அனைத்து இன மக்களையும் ஒன்றாக அரவணைத்து நாட்டை முன்னெடுத்துச் செல்லும் திறமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று தெரிவித்தார்.

காலி முகத்திடலில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஐம்பது நாட்கள் போராட்டத்தின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் தகுந்த பாடம் படிப்பித்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இது எமது போராட்டத்தின் ஆரம்பம் மட்டுமே என்றும் தெரிவித்தார்.

நாட்டை பிரிக்காமலும் இனப்பிரச்சினையை ஏற்படுத்தாமலும் ஒன்றாகச் சேர்ந்து அரசியல் நடத்துவதற்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இணக்கம் கண்டுள்ளோம். ஆனால், இதனை திரிபுபடுத்தி எம்மை 'புலி' என அடையாளப்படுத்த முனைகிறார்கள். இனவாதத்தால் நாட்டை ஒருபோதும் ஒன்றுபடுத்த முடியாது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியால் மட்டுமே இதனை நிறைவேற்ற முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,-

எமது 50 நாள் போராட்டத்தின் வெற்றியை நாம் இன்று கொழும்பு காலி முகத்திடலில் கொண்டாடுகின்றோம். இதற்கு வாய்ப்பளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்குமே நாம் நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும். அவர்களால் தான் நாடு முழுவதிலுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் இன்று காலி முகத்திடலுக்கு வந்திருக்கிறார்கள். ஜனநாயகத்துக்கான எமது போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கிய சந்தர்ப்பத்திலும் நாம் இதேபோன்றதொரு மாபெரும் கூட்டத்தை அலரி மாளிகைக்கு முன்பு நடத்தியிருந்தோம். அதிலும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இன்று அவர்கள் அந்தப் போராட்டத்தின் வெற்றியைக் கொண்டாட வந்திருக்கிறார்கள்.

கடந்த 50 நாட்களாக நாம் அலரி மாளிகையைப் பிடித்து வைத்திருந்தோம். உதய கம்மன்பிலவும் வரவில்லை, விமல் வீரவன்சவும் வரவில்லை. இது விஷம் கொண்ட குளவிகளைக் கொண்ட கட்சியென்பதை நாம் நாட்டுக்கு தெரியபடுத்தியுள்ளோம்.

நாம் தான் வீடுவீடாகச் சென்று மஹிந்தராஜபக்ஷவின் குடும்பத்தவர்களுக்கெதிராக போராடி, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவிக்குக் கொண்டு வந்தோம். எனவே, வேறு எந்த கட்சியிலும் பார்க்க ஜனாதிபதியை விமர்சனம் செய்யும் உரிமை எமக்கே உண்டு.

நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் சுயாதீனமாக அமைந்தது. அதற்கான அடிக்கல்லை ஏற்படுத்தியது ஐ.தே.க தான். கடந்த ஆட்சியின்போது ஒரு தொலைபெசி அழைப்பில் நீதிமன்ற தீர்ப்பைக்கூட ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டிய வகையில் மாற்றியமைத்துக் கொண்டார்கள் என்றார்.

லக்ஷ்மி பரசுராமன்

Tue, 12/18/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை