கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ரணில் எழுத்து மூலம் உத்தரவாதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை களுக்கு ரணில் விக்கிரமசிங்க எழுத்துமூல உத்தரவாதம் வழங்கியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் கட்சியின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்தமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், பல தரப்புக்களுடனும் நாம் நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இதன்படி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (நேற்று முன்தினம்) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அதில் பல கோரிக்கைகளுக்கு எழுத்துமூல இணக்கப்பாட்டை வழங்குமாறு கோரியிருந்தோம். அதற்கமைய எழுத்து மூல இணக்கப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் வழங்கியுள்ளார்.

முக்கியமாக அரசியலமைப்பு மாற்றம், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிப் பிரச்சினைகள் வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தால் பல காணிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் கையகப்படுத்தப்படுகின்றன. இவை நிறுத்தப்படுவதுடன் ஏற்கனவே எடுக்கப்பட்ட காணிகள் மீள வழங்கப்பட வேண்டும், ஐ.நா 30/1 தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதாக அரசாங்கம் ஏற்கனவே இணங்கியிருந்தது. அவற்றை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்கு நாம் எழுத்துமூல உத்தரவாதத்தைக் கோரியிருந்தோம். அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்ததுடன், அவற்றை எழுத்துமூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நமது நிருபர்

Thu, 12/13/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை