ஒரே இலங்கையில் அனைவருக்கும் நியாயமான அரசியல் தீர்வு

Rizwan Segu Mohideen
Political solution within the one country-ஒரே இலங்கையில் அனைவருக்கும் நியாயமான அரசியல் தீர்வு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஒரே இலங்கையின் கீழ் அனைத்து மக்களுக்கும் நியாயமாக கிடைக்கவேண்டிய அரசியல் தீர்வை கொண்டுவருவது தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் (16) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் ஆற்றிய முழு உரையும் வருமாறு.

இலங்கையின் பிரதமராக மீண்டும் உங்கள் முன் உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்,

எமது நாட்டின் அடிப்படைச் சட்டம் என்பது அரசியலமைப்பு என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். சர்வசன வாக்கெடுப்பை எமக்கு வழங்கி 87 வருடங்கள் ஆகின்றன. இந்த 87 வருடங்களிலும் எமது நாட்டு மக்கள் அரசியலமைப்பை பாதுகாத்தனர். அடிப்படை உரிமைகளை பாதுகாத்தனர். அவற்றிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியலமைப்பையும், தங்களது உரிமைகளையும் பாதுகாப்பதற்கு முன்வந்தனர்.

2015 ஜனாதிபதித் தேர்தலிலும் அதுவே நடந்தது. அரசியலமைப்பும் மக்களின் உரிமையும் நசுக்கப்பட்ட யுகத்தை நிறைவுக்குக் கொண்டு வர நீங்கள் அனைவரும் கைகோர்த்தீர்கள். நாம் 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை நிறைவேற்றியது, மக்களின் உரிமையை மேலும் மேலும் பாதுகாக்கும் நோக்கத்திலேயே ஆகும். அரசியலமைப்புக்கு விரோதமாகவும் அதற்கு எதிராகவும் செயற்படுவதன் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்படாது என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாட்டின் பிரதமருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானோரின் நம்பிக்கை இருக்க வேண்டும். பெரும்பான்மையினரின் உதவியின்றி பிரதமர் ஒருவருக்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. அதுபோன்று பிரதமர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் நிலையில் அப்பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் பதவிகளிலிருந்து விலக வேண்டும். அரசியலமைப்புக்கு அமைய புதிய பாராளுமன்றம் நியமிக்கப்பட்டதை அடுத்து, நான்கரை வருடங்கள் செல்லும் வரை அதனை கலைப்பதற்கான அதிகாரம் எவருக்கும் இல்லை. அவ்வாறு செய்ய வேண்டுமானால், பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளின் மூலம் நிறைவேற்றப்படும் பிரேரணையின் மூலம் மாத்திரமே அதனை கலைக்கலாம்.

இவ்வரசியலமைப்பு ஒழுங்குகளை மீறுவது தொடர்பான குற்றத்தை தேர்தல் ஒன்றுக்கு செல்வதன் மூலம் சரியாக்கி விடமுடியாது. அவ்வாறான சட்டவிரோத தேர்தலுக்கு வாய்ப்பளிக்க முடியாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பிலிருந்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கு தீர்ப்பின் 85 ஆவது பக்கத்தில் உள்ள பந்தியை இங்கு மொழிபெயர்த்து கூறுகின்றேன்.

"மனுதாரரின் கோரிக்கை நிராகரிப்பதன் மூலம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகும் என்பதால் பொதுமக்களின் சர்வசன உரிமை பாதுகாக்கப்படுவதாக, ஒரு சில பிரதிவாதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. ஆயினும் அரசியலமைப்பின் உறுப்புரைகளுக்கு விரோதமாக தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம், சர்வசன வாக்குரிமை பாதுகாக்கப்படாது. அவ்வாறான தேர்தல் சட்டவிரோதம் என்பதோடு அதன் முடிவுகளும் கேள்விக்குட்பட்டதாகலாம். தேர்தல் ஒன்று வலிதாக்கப்படுவது அது சட்டபூர்வமாக இடம்பெற்றால் மாத்திரமேயாகும். எனவே அரசியலமைப்புக்கு விரோதமாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடாத்துவது என்பது மக்களின் சர்வசன வாக்குரிமையை பாதுகாக்கும் நடவடிக்கை அல்ல"

கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி நான் அலரி மாளிகையிலிருந்து சொன்னதும் அதுவே. நான் அன்று கூறியிருந்தேன், எமது இந்த போராட்டம் ஜனநாயகத்திற்கானதாகும். நீதிக்கானதாகும். அரசியலமைப்பை பாதுகாப்பதற்கானதாகும். சட்டத்தின் ஆட்சிக்கானதாகும். கண்ணியம் மற்றும் ஒழுக்கத்திற்கானதாகும், என்றேன். இப்போராட்டத்தை நாம் ஜெயிப்போம் என்றும் கூறியிருந்தேன்.

நான் இன்று சொல்வதும் அதுவே. நாளை சொல்வதும் அதுவே. எனது வாக்கை நான் காப்பாற்றுவேன். சொல்வதை செய்வேன். செய்ய முடியுமானதையே சொல்வேன்.

அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக இந்நாட்டின் பெரும்பாலானோர் ஒன்றிணைந்தனர். இன, மத, கட்சி பேதமின்றி, இலங்கையர்களாக, தங்களது மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் இலட்சக்கணக்கான மக்கள் இப்போராட்டத்தில் முன்னின்றனர். வெளிநாட்டில் வாழும் இலங்கையர் தங்களால் முடியுமான வகைல் இப்போராட்டத்திற்கு உதவினர். அவர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் இணைந்தமை அவர்கள் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக அல்ல. நாட்டிற்காகவாகும். ஜனநாயகத்திற்காகவாகும்.

அவர்கள் அனைவருக்கும் நான் தலை குனிந்து வணங்குகின்றேன்.

அதுபோன்று மத வழிகாட்டல், வழிமுறைகள் மூலம் எமக்கு வழி காட்டிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட அனைத்து மத போதகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாராளுமன்றத்தின் உயர்நிலையை பாதுகாத்து, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக கௌரவ சபாநாயகர் அவர்கள், எமது அமைச்சர்கள், எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் உயரிய தியாகங்களை செய்தனர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்ற கட்டமைப்பு, தனது சுயாதீனத்தையும் இறைமையையும் உலகிற்கு பறைசாற்றியது. நீதிமன்றங்களுக்கும், நீதிமன்றத்தின் முன் வாதங்களை முன் வைத்த வழக்கறிஞர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதுபோன்று சட்டத்தை பாதுகாத்து, நியாயத்தை நிறைவேற்றிய அரசாங்க ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிசார் ஆகியோருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

கரும் ஊடகவியலாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் உண்மைக்காக போராடிய ஊடகவியலாளர்களுக்கும், சமூக வலைத்தளங்கள் ஊடாக முழு உலகிற்கும் உண்மையை அறிவிக்க, சுயமாக முன்வந்து, இரவு பகல் பாராது பாடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நாம் 2015 ஜனவரி மாதத்திலும், 2015 ஓகஸ்ட் மாதத்திலும் மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டது, இந்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவாகும். ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவாகும். ஊழல் மோசடிகளில் இருந்து தடுப்பதற்காகவாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்காகவாகும்.

கடந்த மூன்று வருடங்களில் நாம் அதில் பெரும்பாலானவற்றை செய்தோம்.

தற்போதுள்ள நீதிமன்றம் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்குவதற்கான சூழல், சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டமை உள்ளிட்ட நாம் எடுத்த முற்போக்கான நடவடிக்கையின் காரணமாக உருவானதாகும்.

கடந்த மூன்றரை வருடங்களில், நாம் விதைத்த நல்லின விதைகளின் பிரதிபலனை இன்று நாடு அனுபவிக்கின்றது. அது எமக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

ஆயினும் செய்ய முடியாத விடயங்களும் இருக்கின்றன. ஒரு சில நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெற்றன. ஒரு சிலவற்றை நிறைவு செய்யமுடியாமல் போனது. ஆயினும் எமது தியாகம் மற்றும் உறுதிப்பாடு இன்னும் உள்ளது. நாம் எமது குறைபாடுகளை சீர் செய்து கொள்வோம். விசேடமாக ஊழல், மோசடி தொடர்பிலான வழக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவோம். பல்லின மக்களும் சமாதானம், சகவாழ்வுடன் வாழ்வதற்கான சூழலை நாம் ஏற்படுத்தினோம். நாம் சமாதானத்திற்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் தொடர்ந்தும் பாடுபடுவோம்.

இனி நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது.

தற்பொழுது நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது தொடர்பில் அரசியல் கட்சிகள் பலவற்றுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அவ்வாறே ஒரே இலங்கையின் கீழ் அனைத்து மக்களுக்கும் நியாயமாக கிடைக்கவேண்டிய அரசியல் தீர்வை கொண்டுவருவது தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உடன் நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.

ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொள்வதற்காக நாட்டை பிரிக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புடன் உடன்படிக்கையில் ஈடுபடுவதற்கு நான் செல்லவில்லை. அன்று நான் எனது தாய் நாட்டிற்காக ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை தியாகம் செய்தேன். இன்றும் நான் அக்கொள்கையிலிருந்து மாறவில்லை.

எதிர்காலத்தில் எமது இலக்கு, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான பரந்துபட்ட கூட்டமைப்பை நிறுவுவதாகும். எதிர்கால சந்ததியினருக்கு பயமின்றி, தலைநிமிர்ந்து, சுதந்திரமாக வாழக்கூடிய பெருமைமிகு சமுதாயத்தை, பொதுமக்களின் கருத்தை கேட்கக்கூடிய அனைவரினதும் உரிமைகளை பாதுகாக்கின்ற ஜனநாயக சூழலின் ஊடாகவே உருவாக்க முடியும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், எந்த ஒரு சக்தியினாலும் நசுக்க முடியாத வகையிலான ஜனநாயக சூழலை உருவாக்குவதே எமது முயற்சியாகும்.

எனது மனம் அவ்வாறான இலங்கையையே வேண்டி நிற்கின்றது. உங்களது மனங்களும் வேண்டி நிற்பது அவ்வாறான இலங்கையையே ஆகும். நம் அனைவரினதும் மனங்களும் வேண்டி நிற்பது அவ்வாறான இலங்கையையே ஆகும்.

எனவே ஏனைய அனைத்து பேதங்களையும் புறந்தள்ளி எமது தாய் நாட்டிற்காக, ஜனநாயகத்திற்காக, மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக, எதிர்கால சந்ததிக்கு சுதந்திரமான நாட்டை வழங்குவதற்காக இப்பரந்துபட்ட கூட்டணியுடன் கைகோர்த்துக் கொள்ளுமாறு நான் உங்கள் அனைவரிடமும் வேண்டிக்கொள்கின்றேன்.

நாம் எமது மனங்களின் கோரிக்கைக்கு இடமளிப்போம்..!

உங்கள் அனைவருக்கும் நன்றி

Sun, 12/16/2018 - 19:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை