ஷகிபின் சிறப்பான ஆட்டத்தால் தொடரை சமன் செய்தது பங்களாதேஷ்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ரி 20 போட்டி (20) நடைபெற்றது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 36 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி பங்களாதேஷ் அணிக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கியது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணியின் லிட்டன் தாஸ் 60 ஓட்டங்களையும் மஹ்மதுல்லாஹ் மற்றும் ஷகிப் அல்-ஹசன் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் முறையே 43 மற்றும் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தனர். மஹ்மதுல்லாஹ் மற்றும் அணித்தலைவர் ஷகிப் அல்-ஹசன் ஆகிய இருவரும் இணைந்து 5 ஆவது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 91 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் அணியின் ஓட்ட எண்ணிக்கை 200 ஓட்டங்களை தாண்டியது. பந்து வீச்சில் செல்டன் கொட்ரல் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

212 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர், கடந்த முதலாவது போட்டியில் அதிரடியாக 16 பந்துகளில் அரைச்சதம் பெற்ற ஷாய் ஹோப் இப்போட்டியிலும் அதிரடியாக விளையாடியிருந்த போதும் அவரால் 36 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. அது தவிர ரோவ்மன் பவல் 50 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஏனைய வீரர்களும் வேகமாக ஓட்டங்களை குவிக்க முனைந்ததன் விளைவாக குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மேற்கிந்திய தீவுகள் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்களை பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்கள் மற்றும் பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் மற்றும் அணித்தலைவர் ஷகிப் அல்-ஹசன் ஆட்ட நாயகனாக தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதியுமான ரி 20 போட்டி இன்று 22 ஆம் திகதி நடைபெறும்.

Sat, 12/22/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை