சிரியா மீது இஸ்ரேல் மீண்டும் வான் தாக்குதல்

சிரிய தலைநகர் டமஸ்கஸுக்கு அருகில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களை தமது வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்ததாக சிரிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில் ஆயுதக்கிடங்கு ஒன்று இலக்கு வைக்கப்பட்டதாகவும் மூன்று படையினர் காயமடைந்ததாகவும் இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சிரிய அரச செய்தி நிறுவனமான சானா குறிப்பிட்டுள்ளது.

“லெபனான் ஆட்புலத்திற்கு மேல் இருந்து இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய ஏவுகணைகளை எமது வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்தது மற்றும் பெரும்பாலானவை அதன் இலக்கை எட்டும் முன்னர் வீழ்த்தப்பட்டன” என்று சிரிய இராணுவ தரப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தெற்கு லெபனானுக்கு மேலால் இஸ்ரேலிய போர் விமானங்கள் மிகத் தாழ்வாக பறந்ததாக லெபனான் அரச செய்தி நிறுவனம் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

இந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னரும் சிரிய வான் பாதுகாப்பு அமைப்பு வானை நோக்கி சுடுவதை காண முடிந்ததாக டமஸ்கஸ் குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர்.

செவ்வாய் இரவில் டமஸ்கஸ் நகரின் வான் பரப்பின் மீது நகரும் பொருள் ஒன்று தடுத்து அழிக்கப்படும் காட்சிகளை சிரிய அரசு ஊடகம் வெளியிட்டது.

எனினும் இது பற்றி இஸ்ரேல் இராணுவம் எந்த பதிலும் அளிக்கவில்லை.

“சிரியாவில் இருந்து விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வீசப்பட்டதால் இஸ்ரேல் வான் பாதுகாப்பு முறை இயங்க ஆரம்பித்தது” என்று இஸ்ரேல் இராணுவம் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தது.

சிரியாவில் உள்ள ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் இராணுவத் தளங்கள் மீது தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காக இஸ்ரேல் இதற்கு முன்பு பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

எனினும், அத்தகைய தாக்குதல்களை நடத்தியதாக அரிதாகவே ஒப்புக்கொண்டுள்ளது.

சிரியாவில் உள்ள ஈரானின் அனைத்து பாதுகாப்பு உட்கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கடந்த மே மாதம் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இது 2011இல் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியபின் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பலஸ்தீனின் கோலன் குன்று பகுதியில் உள்ள இஸ்ரேலின் இராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலுக்குப் பின்னர் இஸ்ரேல் அந்தத் தாக்குதலை நடத்தியது.

Thu, 12/27/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை