சர்வதேச தடையை மீறி வர்த்தக நோக்கில் ஜப்பான் மீண்டும் திமிங்கில வேட்டை

ஜப்பான் வரும் ஜூலை தொடக்கம் வர்த்தக நோக்கில் திமிங்கில வேட்டையை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இதனையொட்டி திமிங்கிலங்களை பாதுகாக்கும் சர்வதேச திமிங்கில ஆணைக்குழுவில் இருந்து விலகப் போவதாகவும் அந்த நாடு கூறியுள்ளது.

திமிங்கிலங்களில் சில இனங்கள் முழுமையாக அழிந்துவிடும் ஆபத்து ஏற்பட்டதை அடுத்து இந்த ஆணைக்குழு 1986இல் வர்த்தக நோக்கில் திமிங்கில வேட்டைக்கு தடைவிதித்தது.

இந்த ஆணைக்குழுவில் 1951 தொடக்கம் அங்கத்துவம் பெற்றிருக்கும் ஜப்பானில், திமிங்கிலம் உட்கொள்வது நாட்டின் கலாசாரங்களில் ஒன்று என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விஞ்ஞான ஆராய்ச்சி என குறிப்பிட்டு ஜப்பான் பல ஆண்டுகளாக திமிங்கிலங்களை வேட்டையாடி அதன் இறைச்சிகளை விற்றுவருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கண்டத்திற்கு உள்ளாகி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜப்பானின் இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றபோது இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இதில் பாதுகாக்கப்பட்டு வரும் மின்கே போன்ற அழிந்து வரும் திமிங்கில இனங்களை ஜப்பான் இனி தாராளமாக வேட்டையாடும் என்று கூறப்படுகிறது.

ஜப்பானுக்குச் சொந்தமான கடற்பகுதிகளில் மட்டுமே வேட்டையாடப்படும் என்றும் இவ்வாண்டின் இறுதிக்குள் ஆணைக்குழுவிடம் தனது முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ஜப்பான் குறிப்பிட்டது. இதனால் அண்டார்டிக் கடல் மற்றும் தென்துருவத்தில் திமிங்கல வேட்டையை ஜப்பான் நிறுத்தும். எனினும் ஜப்பானின் திமிங்கல வேட்டைக்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானில் விற்கப்படும் அனைத்து இறைச்சிகளிலும் திமிங்கில இறைச்சி வெறும் 0.1 வீதம் மாத்திரம் என அந்நாட்டின் அசாஹி பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

Thu, 12/27/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை