கைப்பேசி காணாமல் போனால் முறையிட புதிய இணையத்தளம்

கையடக்கத் தொலைபேசி தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கெனப் பொலிஸ் திணைக்களம் நேற்று புதிய இணையத்தளமொன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது.

இதனடிப்படையில் www.ineed.police.lk என்ற இணையத்தளத்தில் பொது மக்கள் தமது காணாமற்போன மற்றும் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் பற்றிய முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமென்றும் பொலிஸ் பேச்சாளர் அத்தியடசகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள 24 மில்லியன் கையடக்கத் தொலைபேசிகளில் காணாமற்போதல் மற்றும் திருட்டுப்போதல் தொடர்பில் தினமும் 800 தொடக்கம் 1000 வரையான முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப்பெறுகின்றன. இவ்வேலைத் திட்டத்தை இலகுபடுத்தும் வகையிலேயே பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில் இப்புதிய தொழில்நுட்ப வசதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் வசதி கருதி பொலிஸ் திணைக்களமும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவும் இணைந்து ஆரம்பித்துள்ள Sri Lanka Police iNeed Service எனும் இப்புதிய இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுக் காலை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

புதிய தொழில்நுட்பம் மூலம் பணிகளைத் துரிதப்படுத்தவும் கடதாசி பாவனையை குறைக்கும் வகையிலும் இவ்வேலை திட்டம் வழிவகுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்முலம் கையடக்கத் தொலைபேசி காணாமற்போனாலோ அல்லது திருடப்பட்டாலோ இணையத்தளத்திற்கூடாக மேற்படி வலைத்தளத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யலாம்.

முறைப்பாடு கிடைத்தது முதல், தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மொபிட்டல், டயலொக்,எயார்டெல், எட்டிசலாட் மற்றும் ஹட்ச் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும். அதேபோன்று கொள்வனவு செய்யப்படும் கையடக்கத் தொலைபேசி புதியதா என்பது தொடர்பிலும் இத்தொழில்நுட்பத்துக்கூடாக கண்டறியக்கூடியதாக இருக்கும்.

லக்‌ஷ்மி பரசுராமன்

Wed, 12/12/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை