சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புகள் வாபஸ் பெறுவதை 'தாமதப்படுத்த' திட்டம்

சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புகளை “மெதுவாக மற்றும் அதிக ஒருங்கிணைப்புடன்” வாபஸ் பெறுவது குறித்து துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

“சிரியாவில் எமது இருதரப்பு ஈடுபாடு, ஐ.எஸ் பற்றி மற்றும் அங்கிருந்து அமெரிக்க துருப்புகளை மெதுவாக மற்றும் அதிக ஒருங்கிணைப்புடன் வாபஸ் பெற நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம்” என்று டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

பல விவகாரங்கள் தொடர்பில் நேட்டோ நட்பு நாடுகளான துருக்கி மற்றும் அமெரிக்கா இடையில் அண்மைக்காலமாக முறுகல் நீடித்து வந்த நிலையிலேயே இரு தலைவர்களிடையே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் துருக்கி ஜனாதிபதி எர்துவான் வெளியிட்டிருக்கும் ட்விட்டரில்,

“(டொனால்ட் டிரம்புடன்) நான் ஆரோக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டேன். சிரியாவின் முன்னெற்றங்கள் மற்றும் வர்த்தக உறவுகள் உட்பட பல்வேறு விடங்களில் எமது ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கு எமக்கிடையே இணக்கம் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புகளை வாபஸ் பெறுவதற்கான கட்டளையில் கைச்சாத்திடப்பட்டதாக அமெரிக்க இராணுவப் பேச்சாளர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டுள்ளார். இது பற்றி மேலதிக எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜேட்ஸ் மட்டிஸ் கடந்த புதன்கிழமை திடீரென இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். ஜனாதிபதியுடனான கொள்கை முரண்பாடுகள் பதவி விலகலுக்கு காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

எதிர்பார்க்கப்பட்டதை விட இரண்டு மாதங்கள் முன்கூட்டியே வரும் ஜனவரி 1 ஆம் திகதி மட்டிஸ் தனது பதவியில் இருந்து வெளியேறுவார் என்று டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

2014 ஆம் ஆண்டு சிரியாவில் வான் தாக்குதல்களை ஆரம்பித்த அமெரிக்கா அடுத்த ஆண்டு ஐ.எஸ் குழுவுக்கு எதிராக அங்கு தரைப் படையை அனுப்பியது. சிரியாவில் தற்போது சுமார் 2000 அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டுள்ளன.

இந்நிலையில் துருக்கி மற்றும் சிரிய எல்லைக்கு துருக்கி மேலதிக துருப்புகளை அனுப்பிய நிலையிலேயே டிரம்ப் மற்றும் எர்துவான் இடையிலான தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

வடக்கு சிரியாவில் இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வது குறித்து கடந்த பல வாரங்களாக எர்துவான் எச்சரிக்கை விடுத்து வருகிறார். எனினும் அமெரிக்க துருப்புகள் வாபஸ் பெறும் திடீர் அறிவிப்பை அடுத்து சிரிய குர்திஷ்களுக்கு எதிரான படை நடவடிக்கையை துருக்கி பிற்போட வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது. சிரியாவில் ஐ.எஸ் குழுவுக்கு எதிரான போர் நடவடிக்கையில் குர்திஷ்கள் தலைமையிலான சிரிய ஜனநாயக படைக்கு அமெரிக்கா உதவி வழங்கி வருகிறது.

எனினும் சிரிய குர்திஷ் போராளிகளை துருக்கி தீவிரவாத குழுவாகவே கருதுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வடக்கு சிரியாவில் துருக்கி இதற்கு முன்னர் இரு படை நடவடிக்கைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Tue, 12/25/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை