இந்தோனேசியாவில் சுனாமி தாக்கிய பகுதிகளில் மழை

இந்தோனேசியாவில் சுனாமி தாக்கிய ஜாவா தீவின் மேற்குக் கடற்கரைகளில் மோசமான காலநிலை காரணமாக மீட்பாளர்கள் தொலைதூர பகுதிகளை அடைவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கடற்கரையை ஒட்டிய மீன்பிடி கிராமங்களை மழை கடுமையாக தாக்கி இருப்பதோடு சேறும் சகதியுமான வீதிகள் ஊடே மீட்பு நடவடிக்கைக்கு தேவையான கனரக இயந்திரங்களை எடுத்து செல்லவும் உதவிகளை கொண்டு செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சுனாமி எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பதால் குடியிருப்பாளர்கள் கரையோரங்களை விட்டு ஒதுங்கியுள்ளனர்.

அருகிலுள்ள அனக் க்ரகடோவா எதிரமலை தொடர்ந்து சாம்பல் புகையை கக்கி வருகிறது. இந்த எரிமலையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சீற்றத்தை அடுத்து நீருக்கடியில் உண்டான நிலச்சரிவே ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் 5 மீற்றர் உயரத்திற்கு சுனாமி பேரலை உருவாகக் காரணம் என நம்பப்படுகிறது. கடுமையான காலநிலை எரிமலையின் பள்ளம் மேலும் பலவீனம் அடைய காரணமாகும் என்று இந்தோனேசிய காலநிலை ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சுனாமி பேரலையால் 430 பேர் உயிரிழந்து குறைந்தது 159 பேர் காணாமல்போயிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தால் மேலும் 1,500 பேர் காயமடைந்து 21,000 பேர் கரையோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். உதவிகளை செய்வதற்கு வசதியாக தேசிய அவசர நிலை வரும் ஜனவரி 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜாவாவின் தென்மேற்கு முனையான சுமுர் புகதியில் மீட்புக் குழு அவதானம் செலுத்தியுள்ளது. எனினும் வீதிகள் சேதமடைந்திருப்பதால் அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்கு ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Thu, 12/27/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை