நியூசிலாந்தில் சாதிக்குமா இலங்கை

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையிலான கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு ரி20 ஆகிய போட்டிகளைக்கொண்டதாக இத்தொடர் அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவால் மிக்க ஒரு தொடராக இது அமைய உள்ளமை நிதர்சன உண்மையாகும். ஒருநாள் போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி ஓரளவு சிறப்பாக ஆடியது எனலாம். குறிப்பாக மேற்கிந்தியத்தீவுகள், பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடன் இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை அணி சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்றிருந்தது. எனினும் இறுதியாக நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான தொடர் தோல்வி இலங்கை அணியை சற்று தடுமாற வைத்தது எனலாம்.

அண்மைக்காலமாக சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் அதிகம் ஆடிய இலங்கை அணி முற்று முழுதாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளமை மிக முக்கியமான விடயமாகும். குறிப்பாக ட்ரெண்ட் போல்ட் மற்றும் டிம் சவ்தி ஆகியோர் அண்மையில் பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்று முடிந்த தொடரில் ஐக்கிய அரபு இராச்சிய மண்ணில் வைத்தே டெஸ்ட் தொடரை வீழ்த்தி சாதனைப் புத்தகத்தில் பெயர் பதித்தது. குறிப்பாக அண்மைக்காலமாக சகல துறைகளிலும் ஒங்கி வரும் பாகிஸ்தான் அணியை அதுவும் அதன் இரண்டாவது தாயகமான ஐக்கிய அரபு இராச்சியத்தில் வைத்து வீழ்த்துவது என்பது சாதாரண விடயமல்ல .

பந்து வீச்சாளர்கள் தவிர நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களும் இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு சொம்ம சிற்பபமாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. உலகிலேயே பலமான வேகப்பந்து வீச்சு அணியான பாகிஸ்தான் அணிக்கெதிராக நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் செயற்பட்ட விதம் அற்புதமானது. குறிப்பாக அணித்தலைவர் கேன் வில்லியம்சன் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்திற்காக இந்திய அணித்தலைவர் விராட் கோலியுடன் போட்டியிடும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த தலைமைத்துவம் மற்றும் ஓட்டக்குவிப்பு ஆகியன மூலம் நியூசிலாந்து அணியை பல வெற்றிகளை நோக்கி இட்டுச்சென்ற கேன் வில்லியம்சனை வீழ்த்த இலங்கை அணி தனியான வியூகம் அமைக்க வேண்டும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

முற்று முழுதாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நியூசிலாந்து ஆடுகளங்களில் சாதிக்க வேண்டிய கட்டாயம் இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு உள்ளது. குறிப்பாக சுரங்க லக்மால் அண்மைக்காலமாக வேகப்பந்து வீச்சுக்கு ஆதரவான மைதானங்களில் மிகச்சிறப்பாக பந்து வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு மேலதிகமாக நியூசிலாந்து அணிக்கெதிராக ஒரே போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய நுவன் பிரதீப் மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார ஆகியோரின் பங்களிப்பும் இலங்கை அணிக்கு மிக அத்தியவசியமாகும்.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அண்மைக்காலமாக திமுத் கருணாரத்ன மற்றும் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆகியோரைத்தவிர மற்றைய வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.

எனினும் இலங்கை அணியின் துடுப்பாட்டத்திற்கு மேலும் பலம் சேர்க்க உள்வாங்கப்பட்ட சதீர சமரவிக்கிரம மற்றும் திரிமாண்ண ஆகியோர் கழக மட்ட போட்டிகளில் சிறப்பாக ஓட்டங்களைக்குவித்திருந்தமை இலங்கை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் எனலாம். நாளைய போட்டியை காயத்திலிருந்து மீண்டிருக்கும் தினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ளதுடன் துடுப்பாட்டத்தில் திறமைகளை காட்ட வேண்டிய கட்டாயத்தில் சந்தித்தால் உள்ளமை குறிப்பிடத்தக்கது. மறுபுறம் ஓட்டங்களைக் குவிக்க தடுமாறிவரும் குசல் மெண்டிஸ் விளையாட சந்தர்ப்பம் வழங்கப்படும் பட்சத்தில் துடுப்பாட்டத்தில் தன் திறமையை வெளிக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை விட மிக முக்கியமாக நியூசிலாந்து தொடருடன் இலங்கை அணியின் பயிற்றுவிப்புக்குழாமில் பாரியதொரு மாற்றமும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஸ்டீவ் ரிக்ஸனும் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட திலான் சமரவீர நீக்கப்பட்டு இங்கிலாந்தின் டர்ஹம் பிராந்திய கிரிக்கெட் கழகத்தின் பயிற்றுவிப்பாளரான ஜொனதன் லூயிஸும் நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

கொலின் மொன்றோ, க்ரேன்ட்ஹோம் போன்ற சகலதுறை ஆட்டக்காரர்களினதும் வட்லிங், நிகொல்ஸ் மற்றும் லதம் போன்ற சிறப்பான விக்கெட் காப்பாளர்களது ஒளியிலும் பிரகாசிக்கும் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவது என்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. எனினும் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியை நோக்கிச்செல்லத் துடிக்கும் இலங்கை அணி இந்த சவால்களை முறியடித்து வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் அவாவாகும்.

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளை பார்க்கும் பட்சத்தில் இலங்கை அணி 12 வருடங்களுக்கு முன்னரே நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியுள்ளது.

நியூசிலாந்து மண்ணில் இதுவரை இரு அணிகளுக்குமிடையே இடம்பெற்ற 17 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் 2 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளதோடு 5 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றுள்ளன. அந்தவகையில் வெற்றிப்பெரும்பான்மையும் நியூசிலாந்து வசம் உள்ள நிலையில் போராட வேண்டிய நிலையில் இளம் இலங்கை அணி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று (15) இடம்பெறவுள்ள போட்டியில் விளையாடவுள்ள உத்தேச வீரர்களாக தனுஷ்க குணதிலக, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், அஞ்சலோ மெத்திவ்ஸ், நிரோசன் திக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, சுரங்க லக்மால், தில்ருவன் பெரேரா, நுவன் பிரதீப் மற்றும் லஹிரு குமார ஆகியோர் உள்வாங்கப்படலாம் என்பதுடன் இவர்களில் ஒருவருக்கு பதிலாக லஹிரு திரிமான்ன அல்லது சதீர சமரவிக்கிரம உள்வாங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து சார்பில் கேன் வில்லியம்சன், டொம் லதாம், ஜீட் ராவல், ரோஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், பி ஜெ வட்லிங், வில் யங், கொலின் டி க்ரேன்ட்ஹோம், டிம் சவ்தி, ட்ரெண்ட் போல்ட், மற்றும் மெட் ஹென்றி ஆகியோர் நாளைய போட்டியில் விளையாடும் அணியாக அமைய வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

 

 

Sat, 12/15/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை