நான்கரை வருடங்கள் செல்லும்வரை பாராளுமன்றை கலைக்க முடியாது

உச்சநீதிமன்றம் ஒருமித்த தீர்ப்பு
நீதித்துறையின் சுயாதீனம் உறுதி

அரசியமைப்பின் சட்ட ஏற்பாடுகளுக்கிணங்க நான்கரை வருடங்கள் செல்லும் வரை பாராளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியாதென உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு நேற்று (13) மாலை அறிவிக்கப்பட்டது.இதன்படி, நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாதென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உட்பட ஏழுபேர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் ஏகமனதாக இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது.மனுக்கள் தொடர்பான விசாரணைகள் டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் நடைபெற்றன.

அதனடிப்படையில் மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போது ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்பு முரணானது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர்களால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த மை குறிப்பிடத்தக்கது.ஒக்டோபர் 26 ஆம் திகதி அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகத் தீர்மானித்தது.

இதனை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். தமது இந்த முடிவை சபாநாயகர் கருஜயசூரியவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

ஒக்டோபர் 26ல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவியேற்றார்.

ஒக்டோபர் 26 புதிய பிரதமரின் பதவியேற்பை யடுத்து, ரணில் விக்கிரமசிங்கவை உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

அதன்படி, அரசியலமைப்பு திருத்தின் 42 (4) சரத்தின் பிரகாரம் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமர் தன்னால் நியமிக்கப்படுவதாகவும், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஒக்டோபர் 27 ஆம் திகதியன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டது.

ஒக்டோபர் 27 ஆம் திகதியன்று, உடனடடியாக அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் பிற்போடப்பட்டது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இது தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி பாராளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் நடைபெறுமென அதில் தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்துக்கு அமைய பாராளுமன்றம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று, பாராளுமன்றத்தை பிற்போடுவது சம்பந்தமாக வெளியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இந்த மனுவை தாக்கல் செய்தார்.

நவம்பர் 2 ஆம் திகதியன்று, பாராளுமன்றத்தை நவம்பர் மாதம் 7 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். கட்சித் தலைவர்களுடன் அப்போது இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நவம்பர் 9 ஆம் திகதியன்று, பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.

நவம்பர் 9 - இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 33 ஆவது உறுப்புரை 2 (இ) உப உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைவாக 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படுவதுடன் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அன்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படவிருப்பதாக ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

இதற்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் திகதி 2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதியாக இருந்தது. அத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை 2018 நவம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 2018 நவம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாகவும் அந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நவம்பர் 12 ஆம் திகதியன்று, பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. இம் மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இவ்வாறு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லையென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பிற்கு விரோதமான செயல் எனவும் மனுக்களில் குறிப்பிடப்பட்டன.

இதனால் பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நிராகரிக்குமாறும் விசாரணைகளின் இறுதி முடிவுகள் வரும் வரையில் பொதுத் தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடுமாறும் உயர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

நவம்பர் 12 ஆம் திகதியன்று, பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்காக 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இதன்படி மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது.

நவம்பர் 13 ஆம் திகதியன்று, 19 ஆவது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் வேளையிலேயே இவ்வாறு சட்ட மா அதிபர் சார்பில் நீதிமன்றில் விளக்கமளிக்கப்பட்டது.

நவம்பர் 13 ஆம் திகதியன்று, -பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவொன்றை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த இடைக்கால தடையுத்தரவு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இம் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 14 ஆம் திகதியன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்க ப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணி சார்பில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார்.

நவம்பர் 14 ஆம் திகதியன்று, புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறினார். நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதி மற்றும் அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவை அரசியலமைப்புக்கு எதிரானது என்று 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

நவம்பர் 15 ஆம் திகதியன்று, பாராளுமன்றத்தில் அமைதியற்ற நிலை தோன்றியது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து கொண்டதால் அங்கு பதற்ற நிலை தோன்றியது.

நவம்பர் 15 ஆம் திகதியன்று, பாராளுமன்றம் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையையடுத்து நடைபெற்ற கட்சித் தலைர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

நவம்பர் 16 ஆம் திகதியன்று, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறினார். பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் பிரகாரம் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறினார். நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் 19 ஆம் திகதியன்று, உச்ச நீதிமன்றத்தினால் தடை உத்தரவு ஒன்று விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவின் பிரதிவாதிகளாக சபாநாயகர், சட்ட மாஅதிபர் மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளரின் ​பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

நவம்பர் 19 ஆம் திகதியன்று, பிரதமரின் செயலாளருக்கு அரசாங்க பணத்தை பாவிப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனத் தெரிவித்து பிரேரணை ஒன்று பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேரணையை ஒப்படைப்பதாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். இதேவேளை பிரேரணை பாராளுமன்றத்தில் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 23 ஆம் திகதியன்று, பாராளுமன்றத்தில் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந் நிலையில் மின்னணு வாக்கெடுப்புக்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டன. பாராளுமன்றம் நவம்பர் 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணி வரை பிற்போடப்பட்டது.

நவம்பர் 23 ஆம் திகதியன்று, கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என்று உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது. பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது. பாராளுமன்றத்தை கலைப்பதற்கு வெளியிடப் பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களின் மீதான விசாரணை நாட்களாக டிசம்பர் 04, 05, 06 ஆம் திகதிகள் அறிவிக்கப்பட்டன.

நவம்பர் 26 ஆம் திகதியன்று, மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்ட ரீதியான உரிமை இல்லை எனவும் அவருடைய பதவியை இரத்துச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நவம்பர் மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

நவம்பர் 26 ஆம் திகதியன்று, பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்து வழக்கை விசாரணை செய்வதற்கு ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழுவை பிரதம நீதியரசர் நியமித்தார். இந்த இடைக்கால தடை உத்தரவு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை கடந்த 14 ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தினால் பிற்போடப்பட்டது.

நவம்பர் 27 ஆம் திகதியன்று, பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பாராளுமன்றத்தின் அன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். பாராளுமன்றம் மீண்டும் நவம்பர் 29 ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

நவம்பர் 27 ஆம் திகதியன்று, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரான ஓசல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்தார். மனுவில் பிரதிவாதிகளாக சபாநாயகர், அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

நவம்பர் 28 ஆம் திகதியன்று, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மற்றொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது. தம்பர அமில தேரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 53 பேர் பெயரிடப் பட்டனர்.

நவம்பர் 29 ஆம் திகதியன்று, - பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் பெரும்பான் மையுடன் நிறைவேற்றப்பட்டது. இப் பிரேரணைக்கு ஆதரவாக 123 பேர் வாக்களித்தனர். பாராளுமன்றம் 30 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

நவம்பர் 30 ஆம் திகதியன்று, பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவினால் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆமோதித்து வழி மொழிந்தார்.

நவம்பர் 30 ஆம் திகதியன்று, அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகள் கிடைத்ததாக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். பின்பு பாராளுமன்றம் டிசம்பர் 5 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நவம்பர் 30 ஆம் திகதியன்று, மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிக்கு எதிரான மனு விசாரணைக்கு வந்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சார்பான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். பின் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மனு டிசம்பர் 03ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

டிசம்பர் 03 ஆம் திகதியன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து மனுவை தாக்கல் செய்தனர். மேலும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மனு மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் 04 ஆம் திகதியன்று, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சர்களுக்கும் பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை தொடருவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

டிசம்பர் 05 ஆம் திகதியன்று - சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது. பாராளுமன்ற அமர்வையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பகிஷ்கரித்தது. பாராளுமன்றம் 12ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 01.00 வரை ஒத்தி வைக்கப்பட்டது.

டிசம்பர் 07 ஆம் திகதியன்று, பாராளுமன்றத்தை கலைப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தீர்ப்பு வெளியாகும் வரை நீடிக்கப்பட்டது.

டிசம்பர் 07 ஆம் திகதியன்று, சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

Fri, 12/14/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை