பிரான்ஸ் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

பயங்கரவாத சந்தேக நபரை தேடி வேட்டை

பிரான்ஸின் கிழக்கு நகரான ஸ்ட்ராஸ்பேர்க்கில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய சூட்டை அடுத்து தீவிர உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டிருப்பதோடு பொலிஸார் தாக்குதல்தாரியை தேடிவருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டு 14 பேர் காயமடைந்திருப்பதோடு ஒன்பது பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பயங்கரவாத சிந்தனை கொண்டவர் என கருதப்படும் அடையாளம் காணப்பட்டுள்ள 29 வயது துப்பாக்கிதாரி காயத்துடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபர் மீது அந்த சந்தைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் பதிலுக்கு சுட்டதிலேயே அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரியை தேடி 350 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர் தொடர்ந்து பிரான்ஸில் இல்லை என்று தெரியவருவதாக பிரதி உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்திப்பட்டிருப்பதோடு அனைத்து கிறிஸ்துமஸ் சந்தைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த பகுதியானது ஆண்டுக்கு 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பிரபலமான பகுதியாகும். அதனால் தற்போது ஸ்ட்ராஸ்பேர்க் நகரம் முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு பொலிஸார் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வீதிகளில் நடமாட்டத்தை தவிர்க்கவும் பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Thu, 12/13/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை