இலங்கை-நியூசிலாந்து முதல் டெஸ்ட் சமநிலையில்

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.

கடந்த 15ஆம் திகதி நியூசிலாந்தின் பேசின் ரிசேர்வ் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை இலங்கை அணிக்கு வழங்கியது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஓட்டக்குவிப்பு இலகுவாக அமையவில்லை.

ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்த இலங்கை அணி 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் 4ஆவது விக்கெட்டுக்காக இணைந்த அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஜோடி இலங்கை அணியை கெளரவமான நிலைக்கு கொண்டு சென்றது. கருணாரத்ன 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததுடன் மெத்திவ்ஸ் 83 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னனியில் வந்த திக்வெல்ல ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களை பெற இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில் டிம் சவ்தி 6 விக்கெட்டுகளையும் வேக்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி டொம் லதமின் இரட்டைச்சத்தின் உதவியுடன் 578 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய லதம் இறுதி வரை ஆட்டமிழக்காது 264 ஓட்டங்களைப் பெற்றார். இவர் தவிர அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 91 ஓட்டங்களையும் ரோஸ் டெய்லர் மற்றும் ஹென்றி நிகொல்ஸ் தலா 50 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும் தில்ருவன் பெரேரா மற்றும் தனஞ்சய டி சில்வா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்படி நியூசிலாந்து அணி 297 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் 3ஆம் நாள் தேநீர் இடைவேளையின் பின்னர் தமது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணிக்கு அதிர்ச்சியளிக்க நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் தவறவில்லை. இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக தனுஷ்க குணதிலக்கவும் அதனைத் தொடர்ந்து களம் கண்ட தனஞ்சய டி சில்வா ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்த ஏமாற்றமளித்தார். அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியை இக்கட்டான நிலையிலிருந்து மீட்ட திமுத் கருணாரத்னவும் ஆட்டமிழக்க இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தடுக்க போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணி 3 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 20 ஓட்டங்களைப் பெற்றது.

நியூசிலாந்து அணியின் பக்கம் வெற்றி இருந்த நிலையில் 4ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி மிக நிதானமாக ஆடத்தொடங்கியது. சிறப்பாக ஆடிய குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஜோடி மிக நேர்த்தியாக ஆடியது. 4ஆம் நாள் முழுவதும் விக்கெட் இழப்பின்றி ஆடியதன் மூலம் 10 வருடங்களின் பின் இச்சாதனைக்கு சொந்தக்காரர்களாக மெத்திவ்ஸ் , மெண்டிஸ் ஜோடி பெயர் பதித்தது. 5ஆம் நாள் மழையினால் பாதிக்கப்படும் என எதிர்வு கூறியிருந்த நிலையில் போட்டி பெரும்பாலும் வெற்றி தோல்வியின்றியே நிறைவுறும் என கிரிக்கெட் விமர்சகர்களால் எதிர்வு கூறப்பட்டிருந்தது.

அந்த வகையில் 5ஆம் நாள் ஆரம்பித்து மேலும் 12 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை விடாத காரணத்தால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு கொண்டு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன்போது குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 141 ஓட்டங்களுடனும் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காது 120 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைப்பாட்டமாக 274 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன் இந்த வருடத்தில் டெஸ்ட் போட்டியொன்றில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இரட்டைச்சதம் பெற்ற டொம் லதம் தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி கிரிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை (முதலாவது

இன்னிங்ஸ்) - 275/9 (87)

அஞ்சலோ மெத்திவ்ஸ் 83(153)

திமுத் கருணாரத்ன 79(144)

நிரோஷன் திக்வெல்ல 73(91)

டிம் சவ்தி 5/67 (25)

நெய்ல் வேக்னர் 2/75 (20)

க்ரேன்ட்ஹோம் 1/35 (13)

ட்ரெண்ட் போல்ட் 1/77 (26)

நியூசிலாந்து (முதலாவது

இன்னிங்ஸ்) 578/10 (157.3)

டொம் லேதம் 264(489)

கேன் வில்லியம்சன் 91(93)

ரோஸ் டெய்லர் 50(88)

ஹென்றி நிக்கோல்ஸ் 50(101)

லஹிரு குமார 4/121 (31.3)

தில்ருவன் பெரேரா 2/156 (40)

தனஞ்சய டி சில்வா 2/54 (15)

இலங்கை (இரண்டாவது

இன்னிங்ஸ்) 259/3 (105)

அஞ்சலோ மெத்திவ்ஸ் 120(323)

குசல் மெண்டிஸ் 141(335)*

டிம் சவ்தி 2/52 (25)

ட்ரெண்ட் போல்ட் 1/62 (25)

Thu, 12/20/2018 - 09:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை