புதிய பொறிமுறையூடாக ஒன்றிணைந்து போராடினால் சம்பள உயர்வு சாத்தியம்

இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்திப் பணிகளை ஜனவரி மாதம் முதல் மேற் கொள்ளவுள்ளதுடன், தோட்ட சம்பளப் பிரச்சினை, கூட்டு ஒப்பந்தம் என்றபடியால் அதில் தலையிடுவதற்கு வழிவகையில்லை. அறுபது வீதமான உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கமே இவ் வொப்பந்தத்தில் கைச்சாத்திடலாம் என்ற நியதியுள்ளது. கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி புதிய பொறிமுறையொன்றை உள்வாங்கி, அதனூடாக எல்லோரும் ஒன்றிணைந்து போராடினால் அடிப்படை சம்பள உயர்வை பெற்றுக் கொள்ளலாமென மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நேற்று அமைச்சில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர் திகாம்பரம்,

2015 ஆம் ஆண்டு அமைச்சரவைப் பொறுப் பை ஏற்றுக் கொண்ட பின்னர் மலையக மக்களின் வீடு, காணிப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் அவர்களின் வாழ்வாதாரத் தேவைகள், மக்களின் உரிமை சம்பந்தமாக அதிகார சபையை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேநேரத்தில், அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடுகள் எடுக்கப்பட்டதன் விளைவாக ஜனநாயகத்தை பாதுகாக்க போராடி வெற்றி கண்டோம். இரண்டு மாத கால இடைவெளியில் மக்களின் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன. நீதியை நிலைநாட்டி மீண்டும் அமைச்சை பொறுப்பேற்றுள்ளேன். எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து தொடர்ந்து அபிவிருத்தி திட்டங்கள் செயற் படுத்தப்படும். அபிவிருத்தி திட்டத்தில் வீடு, காணி மட்டுமல்ல மலையக மக்களுக்கு பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் உள்ளன.

இப் பிரச்சினைகளை இனங்கண்டு வெகுவேகமாக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்.

இதே நேரத்தில் இன்று சம்பளப் பிரச்சினையே மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாக இருக்கிறது. இப்பிரச்சினை இன்று பூதாகர மாக எழுந்துள்ளது. பலவிதமான போராட்ட ங்கள் நடைபெற்றுள்ளன. தலவாக்கலை யில் நடைபெற்ற போராட்டம் அநேகரை விழிப்படையச் செய்துள்ளது. நான் அமைச்சரானதால் சம்பளத்தை பெற்றுக் கொடுக்கலாம் என்பது முடியாத காரியம்.

ஆறுமுகன் தொண்டமான் ஓர் அமைச்சர் என்ற ரீதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. தொழிற்சங்க தலைவர் என்ற ரீதியிலேயே முதலாளிமார் சம்மே ளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தொழிற்சங்கத்திற்கும் கம்பனிக்குமிடையில் ஒரு பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் அறுபது வீதமான தொழிற்சங்க பிரதிநிதிகள் இருந்தால் மாத்திரமே இப்பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்ற சட்ட ஒழுங்குமுள்ளது.

இதனை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். என்னிடம் அநேகர் வந்து, நீங்கள் அமைச்சராகி விட்டீர்களே, எமக்கு சம்பளப் பிரச்சினையை தீர்த்து தாருங்கள் என்று கூறுகின்றனர். இதற்காகவே நான் ஒரு அழைப்பை விடுத்திருந்தேன். கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியே வாருங்கள், நாங்கள் எல்லோருமே சேர்ந்து போராடி, நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

போல் வில்சன்

Thu, 12/27/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை