மாவனல்லையில் இரட்டிப்பு பாதுகாப்பு

- சிலை உடைப்போடு தொடர்புடைய ஏழு சந்தேக நபர்கள் கைது
- ஜனவரி 02 வரை விளக்கமறியல்
- சி.ஐ.டி யினர் தீவிர விசாரணை

கண்டி மற்றும் மாவனல்லை பகுதிகளில் புத்தர் சிலைகளைச் சேதப்படுத்தி பதற்ற நிலையை ஏற்படுத்த முனைந்த குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் இதுவரை ஏழு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அதேவேளை, விஷமிகளால் மேற்படி பிரதேசங்களில் இனவாதம் தூண்டப்படுவதை தடுக்கும் வகையில் பூரண பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்ைககளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், சி.ஐ.டியினர் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் நேற்றும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட ஆறு பேர் நேற்று மாவனெல்லை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர். அவர்கள் ஆறு பேரையும் எதிர்வரும் ஜனவரி இரண்டாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, நேற்றுக் கைதானவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களான மேலும் இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர்கள் தொடர்பில் கடுமையான சட்டத்தை பிரயோகிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதேவேளை, மேற்படி சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் விஷமிகளால் இனவாதம் தூண்டப்படுவதைத் தடுக்கும் வகையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அமைதியை நிலைநாட்டும் வகையில் சகல செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 26 ஆம் திகதி அதிகாலை கண்டி, மாவனெல்லை பிரதேசங்களின் சில இடங்களில் சில விஷமிகளால் புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. அதனையடுத்து பொலிஸ் மா அதிபரின் உடனடி நடவடிக்கைக்கிணங்க சி.ஐ.டியினர் அங்கு அனுப்பப்பட்டனர். சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை விடுத்தார்.

மாவனெல்லை பகுதியில் ஒரு புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபரொருவர் பிரதேச வாசிகளால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதனையடுத்து மாவனெல்லை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மேலும் ஐந்து பேரை கைதுசெய்தனர். அத்துடன் இச் சம்பவம் தொடர்பில் நேற்றும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

கண்டி, யட்டிநுவர, வெலம்பட, மாவனெல்லைப் பகுதிகளிலேயே மேற்படி புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 12/28/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை