திருமலைக்கு தென்கிழக்கில் 'பேத்தாய்' புயல் மையம்

வடக்கு, கிழக்கில் கடும் மழை ஆந்திரா ஊடாக நாளை கரை கடக்கும்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘பேத்தாய்’ புயல் திருகோணமலைக்கு தென்கிழக்கில் 700 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கில் 960 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு, தென்கிழக்கில் 1130 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து இலங்கையின் வடமேல் மாகாணத்தை அண்மித்ததாக வடக்கு நோக்கி இது நகர்வதுடன் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து செல்கிறது.

தொடர்ந்து இதே திசையில் நகர்ந்து நாளை (16 ஆம் திகதி) காலை அதிதீவிர புயலாக வலுப்பெற்று சென்னையை நெருங்கவுள்ளது.‘பேத்தாய்’ புயல் கரையை நெருங்க நெருங்க காற்றின் வேகம் கஜா புயல் போல் 120 கி.மீ. வரை இருக்கக்கூடுமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 85 கி.மீ. வேகத்திலும் காற்று வீசிக்கொண்டிருக்கிறது.

இன்று15 ஆம் திகதி தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்திலும் காற்று வீசுகின்றது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை 16 ஆம் திகதி காற்றின் வேகம் 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும், கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி கொந்தளிப்பு ஏற்படும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு அண்மித்ததாக உள்ள இந்த சூறாவளியின் நகர்வால் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்வதுடன் கடற்பிரதேசம் சற்று கொந்தளிப்பாகவும் காணப்படும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.

அது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறுமென வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று பகல் புயல் உருவானது. இதற்கு தாய்லாந்து ‘பேத்தாய்’ என பெயர் சூட்டியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாகியிருப்பதால் வட தமிழகத்தில் இன்று 15, நாளை 16ஆம் திகதிகளில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

17 ஆம் திகதி இரவு மசூலிப்பட்டினத்துக்கும் அமலாபுரத்துக்கும் இடைப்பட்ட பகுதியான ஓங்கோல்-காக்கிநாடா இடையே கரையை கடக்கும். அதன் பிறகு படிப்படியாக வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே ஆழ்கடல் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் கடந்த 3 நாட்களாக வானிலை மையம் அறிவுறுத்தி வருகிறது.

தமிழக கடற்கரை பகுதிகளில் தற்போது மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

Sat, 12/15/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை