பிரான்ஸ் ஆர்ப்பாட்டத்தால் எகிப்தில் மஞ்சள் அங்கி விற்பனைக்கு கட்டுப்பாடு

பிரான்ஸ் ஆர்ப்பாட்டக்காரர்களின் பாணியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை தடுப்பதற்காக எகிப்தில் மஞ்சள் அங்கி விற்பனைக்கு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

எகிப்தில் 2011 மக்கள் எழுச்சி போராட்டத்தின் ஆண்டு நிறைவு நெருங்கியுள்ள நிலையிலேயே இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உபகரண விற்பனையாளர்கள் ஏற்கப்பட்ட நிறுவனங்களுக்கே அங்கிகளை மொத்த விற்பனை செய்ய முடியும் என்றும் சில்லறை விற்பனையாளர்கள் பொலிஸ் அனுமதி பெற வேண்டும் என்றும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த அங்கிகளை வாங்க முயற்சிப்பவர்கள் குறித்த விபரங்களை தர வேண்டும் என்று கடை உரிமையாளர்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பிரான்ஸில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மஞ்சள் அங்கியை ஒரு அடையாளமாக அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை பதவி கவிழ்த்த 2011 ஜனவரி 25 மக்கள் புரட்சி தினமன்று ஆர்ப்பாட்டங்களின் தொடக்க தினமாக ஆர்ப்பாட்டக்காரர்களால் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக அரசு அஞ்சுகிறது.

இந்த கட்டுப்பாட்டுக்கு மத்தியில் மஞ்சள் அங்கியை வைத்திருந்த மொஹமது ரமதான் என்பவர் பொது ஒழுங்குகளை மீறிய குற்றச்சாட்டில் 15 தினங்கள் சிறை வைக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆடையை விற்பதில்லை என்று சில கடை உரிமையாளர்கள் பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

கடந்த ஜுன் மாதம் எகிப்து ஜனாதிபதியாக தனது இரண்டாவது தவணைக்கு பதவி ஏற்ற அப்தல் பத்தா அல் சிசி, வன்முறை, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதாக உறுதி அளித்துள்ளார். எனினும் எகிப்தில் உள்ள அனைத்து அரசியல் எதிர்ப்பாளர்களையும் ஒடுக்கும் முயற்சியில் ஆவர் ஈடுபட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

Thu, 12/13/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை