“இருப்பதை இல்லாதவருக்கு கொடுப்போம்” பாப்பரசர் பிரான்ஸிஸ் கிறிஸ்மஸ் வாழ்த்து

பொருள் சார்ந்து இல்லாமல், எளிமையான வாழ்க்கையை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று, கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி விடுத்துள்ள செய்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தம்மிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்வதற்கும், பிறருக்குக் கொடுப்பதற்கும் உலக மக்கள் கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் பாப்பரசர் இதன்போது வலியுறுத்தினார்.

வத்திக்கானின் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸுக்கு முன் தின வழிபாட்டில் அவர் உரையாற்றினார். வழிபாட்டுக் கூட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.

பாப்பரசர் தமது உரையில், மனிதகுலம் பேராசையும், பெருவேட்கையும் உடையதாய் மாறிவருவதாகக் குறிப்பிட்டார். ஏசு கிறிஸ்துவின் பிறப்பு புதியதொரு வாழ்க்கைமுறையைப் பறைசாற்றியதாக அவர் கூறினார்.

அது தேவைக்கு அதிகமாகச் சேர்த்துவைப்பதோ, அனைத்தையும் தானே பயன்படுத்தவேண்டும் என்று நினைப்பதோ அல்ல என்பதை அவர் நினைவுறுத்தினார்.

82 வயதாகும் பாப்பரசர் பிரான்ஸிஸ் நேற்று 6ஆவது முறையாக, புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் திரண்டிருக்கும் யாத்திரிகர்கள் முன்னிலையில் கிறிஸ்மஸ் வாழ்த்துரையை வழங்கினார்.

இதனிடையே ஏசுபிரான் பிறந்த இடமான பெத்லஹேமில் நடத்தப்பட்ட நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் உள்ள மேங்கர் சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த பழமையான தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து தேவாலயத்தில் இருந்த மிகவும் பழமையான மணி ஒலிக்கப்பட்டது.

Wed, 12/26/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை